இந்தியாவில் வளர்ந்த பலர்போல, 90s Kids , 2k Kids போல எனக்கும் கால்பந்தின் முதல் நினைவுகள் தொலைக்காட்சியோடு தான் தொடங்குகின்றன. இரவு நேரங்களில் ஒளிபரப்பான உலகக்கோப்பை போட்டிகள், நாளிதழ்களில் வந்த புகைப்படங்கள், நண்பர்களுடன் நடந்த விவாதங்கள்—இவை அனைத்தும் கால்பந்தை வெறும் விளையாட்டாக அல்ல, ஒரு அனுபவமாக மாற்றின. மாரடோனா, ரொனால்டோ, ரொனால்டின்யோ, சிதான் போன்ற வீரர்கள் எங்களுக்கு தொலைதூர நாடுகளின் கதைகளைச் சொன்னார்கள்.
அந்த காலத்தில் உலகக்கோப்பை என்பது அனைவருக்குமான திருவிழாவாக இருந்தது. அர்ஜென்டினா, பிரேசில், எகிப்து, நைஜீரியா அல்லது இந்தியா—எங்கு இருந்தாலும், மக்கள் அந்த விழாவின் ஒரு பகுதியாக உணர்ந்தனர்.
மக்களால் உருவாக்கப்பட்ட கால்பந்து
கால்பந்து இங்கிலாந்தில் விதிமுறைகளுடன் வடிவமைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அதை உலகின் மிகப் பெரிய விளையாட்டாக மாற்றியது சாதாரண மக்கள்தான். லத்தீன் அமெரிக்காவின் தொழிலாளர்கள், ஆப்பிரிக்காவின் இளைஞர்கள், மேற்கு ஆசியாவின் ரசிகர்கள், ஐரோப்பாவின் தொழிற்சாலை நகரங்கள்—இவையெல்லாம் சேர்ந்து கால்பந்தின் பண்பாட்டை உருவாக்கின.
மைதானங்களில் ஒலிக்கும் பாடல்கள், கொடிகள், முழக்கங்கள், ரசிகர்களின் உணர்ச்சிகள்—இவை எந்த நிறுவனமும் உருவாக்கியவை அல்ல. அவை மக்களின் பங்களிப்பால் உருவானவை. அதனால்தான் கால்பந்து வெறும் விளையாட்டைத் தாண்டி ஒரு சமூக அனுபவமாக மாறியது.
அதிக செலவான FIFA கோப்பை - கொதிக்கும் ரசிகர்கள்
2026 உலகக்கோப்பை கால்பந்து போட்டி என்பது வெறும் விளையாட்டு நிகழ்வல்ல - அது முதலாளித்துவத்தின் அட்டூழியம்! கால்பந்து விளையாட்டு உலகம் முழுவதும் பரவிய காரணம் லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா நாடுகளில் உள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்கள், ஏழை எளிய மக்களின் ஆர்வத்தால்தான். ஆனால் இன்று? இந்த விளையாட்டை பெருநிறுவனங்கள், டிவி சேனல்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் கைப்பற்றிவிட்டனர்.
FIFA அமைப்பு "மாறும் விலை முறை" (Dynamic Pricing) என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, டிக்கெட் விலையை தேவைக்கு ஏற்றார் போல் உயர்த்தலாம்! $60 டிக்கெட் என்று சொன்னார்களே? அது வெறும் பொய்! அந்த டிக்கெட் எங்கும் கிடைக்காது. இது மக்களை ஏமாற்றும் ஒரு நாடகம் மட்டுமே. உண்மையில், குரூப் சுற்று போட்டிக்கே குறைந்தபட்சம் $220 (சுமார் ₹18,000) வசூலிக்கிறார்கள்! இறுதிப் போட்டிக்கு $11,000 (சுமார் ₹9 லட்சம்) வரை! இது விளையாட்டா? இல்லை, இது கொள்ளை!
FIFA தரப்பில் அதிகமான பாதுகாப்பு ஏற்பாடுகள், மேம்பட்ட ஒளிபரப்பு தொழில்நுட்பங்கள், அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகளில் நடைபெறும் போட்டிகளின் நிர்வாகச் செலவுகள் ஆகியவை விலை உயர்வுக்கான காரணங்களாகக் கூறப்படுகின்றன. ஆனால் இந்தச் செலவுகளைச் சமாளிப்பதற்காக FIFA தேர்ந்தெடுத்துள்ள அணுகுமுறை, அதன் சுமையை ரசிகர்கள் மீதே ஏற்றுகிறது என்ற விமர்சனங்களும் எழுகின்றன. குரூப் சுற்றுப் போட்டிகளுக்கே நூற்றுக்கணக்கான டாலர்கள் செலவாகும் நிலையில், இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகள் ஆயிரக்கணக்கான டாலர்களை எட்டுகின்றன.
"9 லட்சம் ருபாய் 1 - டிக்கெட்டா?"
2026 உலகக்கோப்பையின் மிகப்பெரிய கொடுமை என்னவென்றால், சாதாரண ரசிகர்களை வேண்டுமென்றே வெளியேற்றுவதுதான். டிக்கெட் விலை மட்டுமல்ல - விமானக் கட்டணம், ஹோட்டல் விலை, உள்ளூர் போக்குவரத்து என அனைத்தும் வானைத் தொடும் அளவுக்கு உயர்ந்துவிட்டது. ஒரு சாதாரண தொழிலாளி, விவசாயி, மாணவன் இந்த போட்டிகளை பார்க்க முடியாது. இது தற்செயலாக நடப்பதல்ல - இது முதலாளித்துவத்தின் திட்டமிட்ட வேலை!
ஒருகாலத்தில் முதலாளித்துவமும் பெரும் நிறுவனங்களும் தொழிலாளர் மக்களின் விளையாட்டு மைதானங்கள், திறந்த வெளிகள் மற்றும் பொதுப் பயன்பாட்டு இடங்களை ஆக்கிரமித்து அவற்றை வணிக வளாகங்களாகவும் ரியல் எஸ்டேட் திட்டங்களாகவும் மாற்றின. இன்று அதே செயல்முறை கால்பந்தின் உலகிலும் நடைபெறுகிறது, மக்களின் விளையாட்டாக இருந்த கால்பந்து, இன்று அதை உருவாக்கிய மக்களையே அரங்கத்திற்கு வெளியே நிறுத்தும் நிலைக்குத் தள்ளப்படுகிறது. மைதானங்களைப் பறித்தவர்கள், இப்போது விளையாட்டின் ஆன்மாவையும் பறிக்க முயல்கிறார்கள்.
நட்சத்திரங்கள் மறைகின்றன
இன்றைய கால்பந்து உலகம் "விளையாட்டு அரசியலுக்கு அப்பாற்பட்டது" என்று பொய் சொல்கிறது. ஆனால் உண்மை வேறு! பணக்காரர்களுக்கும், அதிகாரத்திற்கும் சார்பாக இருக்கும் அரசியலை அனுமதிக்கிறார்கள். ஆனால் தொழிலாளர்கள் பக்கம், ஏழைகள் பக்கம் பேசுபவர்களை மௌனிக்க சொல்கிறார்கள். இன்றைய பிரபல வீரர்கள் - கிறிஸ்டியானோ ரொனால்டோ, நெய்மர் போன்றவர்கள் - வலதுசாரி, ஜனநாயக விரோத தலைவர்களுடன் (டிரம்ப், போல்சனாரோ) போஸ் கொடுக்கிறார்கள். யாரும் அவர்களை கேள்வி கேட்பதில்லை.
ஆனால் சாக்ரடீஸ்? அவர் வேறு மாதிரி! கால்பந்து ஜாம்பவான்களுள் ஒரு துருவ நட்சத்திரம், பிரேசிலின் இந்த மகத்தான வீரர், மருத்துவர், புரட்சியாளர் - அவர் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக போராடினார். தொழிலாளர்கள் உரிமைக்காக குரல் கொடுத்தார். "என் அரசியல் வெற்றிகள் தான், என் விளையாட்டு வெற்றிகளை விட முக்கியம். ஒரு போட்டி 90 நிமிடங்களில் முடியும். ஆனால் வாழ்க்கை தொடரும்" என்று சொன்னார்.
மரணத்துக்கு பிறகும், சாக்ரடீஸ் நினைவுகூரப்படுகிறார். ஏனென்றால் அவர் உண்மையான பக்கத்தில் நின்றார் - மக்கள் பக்கம்!
உண்மையான ஆட்டம் - திடலுக்கு வெளியநடக்கிறது
டிக்கெட் விலைகள், TV , SATELLITE STREAMING, ஒளிபரப்பு உரிமைகள், விளம்பர ஒப்பந்தங்கள், கார்ப்பரேட் முதலீடுகள், தனியார் உரிமையாளர்கள், ஸ்பான்சர்கள், TABLOID மற்றும் ஊடகச் சந்தைகள்—இவையெல்லாம் சேர்ந்து இன்று கால்பந்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கின்றன. ஒரு காலத்தில் ரசிகர்களின் குரல், உள்ளூர் சமூகங்களின் பங்களிப்பு, கிளப்புகளின் வரலாறு ஆகியவை கால்பந்தின் அடையாளத்தை வடிவமைத்தன. ஆனால் இன்று அந்த இடத்தை சந்தை தர்க்கமும் லாபக் கணக்குகளும் ஆக்கிரமித்து வருகின்றன.
மைதானத்தில் வீரர்கள் கோப்பைக்காக போராடுகிறார்கள். ரசிகர்கள் தங்கள் அணிக்காக பாடுகிறார்கள். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் அந்தக் காட்சியை ரசிக்கிறார்கள். ஆனால் அதே நேரத்தில், மைதானத்திற்கு வெளியே இன்னொரு போட்டியும் நடைபெறுகிறது. அந்தப் போட்டி கோல்களைப் பற்றியது அல்ல; அதிகாரத்தைப் பற்றியது. அது விளையாட்டை யார் கட்டுப்படுத்துகிறார்கள், யார் லாபம் அடைகிறார்கள், யாருக்கு அணுகல் இருக்கிறது, யார் வெளியேற்றப்படுகிறார்கள் என்ற கேள்விகளைச் சுற்றி நடைபெறுகிறது.
கால்பந்து - எல்லாருக்குமானது ப்ரோ
2026 உலகக்கோப்பை நம்மை ஒரு முக்கிய கேள்வியை கேட்க வைக்கிறது: கால்பந்து யாருக்கு சொந்தம்? பணக்கார முதலாளிகளுக்கா? அல்லது கோடிக்கணக்கான சாதாரண ரசிகர்களுக்கா?
சாக்ரடீஸ் காட்டிய பாதைதான் சரியானது. அவர் நிரூபித்தார் - விளையாட்டு வீரர்கள் வெறும் பொழுதுபோக்கு கலைஞர்கள் அல்ல, அவர்களும் தொழிலாளர்கள் தான்! அவர்களின் உழைப்புதான் பில்லியன் டாலர் லாபத்தை உருவாக்குகிறது. எனவே அவர்களுக்கு அரசியல் குரல் உண்டு ,லத்தீன் அமெரிக்கா மற்றும் மூன்றாம் உலக நாடுகளின் கால்பந்து விளையாட்டே ஒரு அரசியல்தான்; அது ஆதிக்கம், ஏகாதிபத்தியம், இனவெறி மற்றும் சுரண்டலுக்கு எதிரான அரசியல்; சொல்லப்போனால், அது குரலற்ற உழைக்கும் வர்க்கத்தின் குரலாகவே திகழ்கிறது.
அந்தக் குரல் எழ வேண்டும்; அதற்கான நேரம் மீண்டும் வந்துவிட்டது. இன்றைய இளைஞர்கள், ரசிகர்கள், தொழிலாளர்கள் ஒன்றுபட வேண்டும், இன்று முக்கியமான கேள்வி, யார் உலகக்கோப்பையை வெல்லப் போகிறார்கள் என்பதல்ல. கால்பந்து யாருடையது? அது இன்னும் மக்களின் விளையாட்டாக இருக்கிறதா? அல்லது பெரும் நிறுவனங்களின் வணிகப் பொருளாக மாறிவிட்டதா? என்பதுதான். அந்தக் கேள்விக்கான பதிலைத் தேடும் போராட்டமே இன்று மைதானத்திற்கு வெளியே நடைபெறும் உண்மையான ஆட்டமாக இருக்கிறது.