Bread and RedBread and Red
ArticlesEnglishVideosPodcastsEditorialEventsInteractShop
HomeArticlesEnglishVideosPodcastsEditorialEventsInteractShop
Bread and RedBread and Red
SupportContact
Join Now

Copyright © 2026 Bread and Red

fXig
Politicscasteeconomycinema

எம்.ஜி.ஆரும் இந்துத்துவமும் - 1

By சஞ்சய் ராமசாமி·August 16, 2026
4 min read
எம்.ஜி.ஆரும் இந்துத்துவமும் - 1

எம்.ஜி.ஆரின் ஜனரஞ்சக
அரசியலின் வரம்புகள்


தமிழக அரசியலில் எம்.ஜி.ஆர் என்ற பெயரை நலத்திட்ட அரசியலில் இருந்து பிரிக்க முடியாது. சத்துணவுத் திட்டம், ஏழைகளுக்கான நலத்திட்டங்கள், பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களிடம் பெற்ற செல்வாக்கு ஆகியவை அவரை தமிழகத்தின் மிக முக்கியமான முதலமைச்சர்களில் ஒருவராக மாற்றின. ஆனால், எம்.ஜி.ஆர். உருவாக்கிய பிம்பத்திற்கும் எல்லை இருந்தது. அவரது ஆட்சிக்காலத்தின்  மற்றொரு பக்கமும் அரசியல் ஆய்வுக்கு உரியது. அது, தமிழகத்தில் இந்துத்துவ அரசியல் வேரூன்றத் தொடங்கிய காலகட்டத்துடன் அவரது ஆட்சி இணைந்து நிற்பதுதான்

எம்.ஜி.ஆர் இந்துத்துவ சித்தாந்தத்தை ஏற்ற தலைவர் அல்ல. அவர் இந்து ராஷ்டிரம் கோரவில்லை; இந்திய அரசியலமைப்பின் மதச்சார்பின்மைக்கு எதிராகவும் பேசவில்லை. அதே நேரத்தில், அவரது அரசியல் அணுகுமுறைகள் சில, இந்துத்துவ அமைப்புகள் வளர்வதற்கு சாதகமான அரசியல் சூழலை உருவாக்கின என்ற விமர்சனம் நீண்ட காலமாக இருந்து வருகிறது.

மீனாட்சிபுரம் சாதி மறுப்பும் மதமாற்றமும்


இந்த விவாதத்தில் முதலில் நினைவுகூரப்படுவது 1981-ஆம் ஆண்டு மீனாட்சிபுரம் மதமாற்றம். திருநெல்வேலி மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான தலித் மக்கள் இஸ்லாமைத் தழுவியது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஆனால், அவர்கள் ஏன் மதம் மாறினார்கள் என்ற கேள்வி அரசியல் மையமாகவில்லை. தீண்டாமை, சாதி அவமதிப்பு, சமூக ஒதுக்கல் ஆகியவை பின்னணிக்குத் தள்ளப்பட்டன. அதற்கு பதிலாக, "மதமாற்றம்", "இந்துக்கள் ஆபத்தில் உள்ளனர்" என்ற அரசியல் மொழியே மேலோங்கியது.

தொல். திருமாவளவன் இந்த நிகழ்வை ஒரு மதமாற்ற நிகழ்வாக அல்ல, சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான தலித் மக்களின் மனித மரியாதைப் போராட்டமாகப் பார்க்கிறார். அவரது பார்வையில், அரசும் ஆதிக்க அரசியலும் சாதியை எதிர்கொள்ளாமல், மதமாற்றத்தை மட்டும் பிரச்சினையாக்கியது. இந்த மாற்றப்பட்ட அரசியல் விவாதம்தான் பின்னர் இந்துத்துவ அமைப்புகள் தமிழ்நாட்டில் தங்களது செல்வாக்கை விரிவுபடுத்த உதவியது.

இந்தச் சூழலில்தான் எம்.ஜி.ஆர் சட்டமன்றத்தில், "மற்ற மதங்களுக்கு அமைப்புகள் இருக்கும்போது, இந்துக்களுக்கும் அமைப்புகள் இருக்கக் கூடாதா?" என்று கேள்வி எழுப்பினார். பின்னர் RSS தலைவர்கள், இந்து வாக்குகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர் கூறியதாக நினைவுகூர்ந்துள்ளனர். ஆனால், இந்தக் கூற்றுகளுக்கு முழுமையான சுயாதீன வரலாற்று ஆதாரங்கள் இல்லை. இருப்பினும், இந்து அமைப்புகளின் அரசியல் இருப்பை எம்.ஜி.ஆர் சட்டபூர்வமான ஒன்றாகக் கருதியது குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.

மண்டைக்காடு கலவரம் 


1982-ஆம் ஆண்டு மண்டைக்காடு கலவரம் இந்த விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியது. திராவிடர் கழகத்தின் கி. வீரமணி, இது இயல்பாக ஏற்பட்ட இந்து–கிறிஸ்தவ மோதல் அல்ல; RSS உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளின் திட்டமிட்ட தலையீட்டால் தீவிரமடைந்த மோதல் என்று குற்றம்சாட்டினார். எம்.ஜி.ஆர் அரசின் சில அமைச்சர்கள் வெளிப்படையாக இந்து அடையாள அரசியலை முன்னிறுத்தியதும், RSS வளர்ச்சியை அரசியல் ரீதியாக எதிர்க்காததும் மதச்சார்பின்மை அரசியலை பலவீனப்படுத்தியதாக அவர் விமர்சித்தார்.

இதே சம்பவத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வேறொரு கோணத்தில் அணுகியது. அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த தோழர் ஜே. ஹேமச்சந்திரன், கலவரப் பகுதிக்கு முதலமைச்சர் எம்.ஜி.ஆரை நேரில் அழைத்துச் சென்று நிலைமையை எடுத்துரைத்தார் என்று CPI(M) ஆவணம் கூறுகிறது. கலவரத்தின் காரணங்களை விசாரிக்க வேணுகோபால் ஆணையம் அமைக்க வலியுறுத்தியதோடு, அதன் விசாரணையிலும் முக்கிய பங்கு வகித்ததாக கட்சியின் பதிவுகள் குறிப்பிடுகின்றன. கலவரம் மாவட்டம் முழுவதும் பரவாமல் தடுக்க குன்றக்குடி அடிகளார் உள்ளிட்ட சமூகத் தலைவர்களுடன் இணைந்து அமைதியை ஏற்படுத்த முயன்றதாகவும் அவர்கள் நினைவுகூருகின்றனர்.

இந்த அனுபவத்தின் அடிப்படையில், கம்யூனிஸ்ட் இயக்கம் ஒரு முக்கியமான கருத்தை முன்வைத்தது. கம்யூனிஸ்டுகள் மத நம்பிக்கைக்கு எதிரானவர்கள் அல்ல; மதவெறி அரசியலுக்கே எதிரானவர்கள். மண்டைக்காடு போன்ற கலவரங்களில் அரசியல் கட்சிகள் மத அடையாளங்களை தேர்தல் அரசியலுக்குப் பயன்படுத்தியதே மிகப்பெரிய ஆபத்து என்று அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர்.

இடதுசாரிகளின் விமர்சனம்


இடதுசாரி கட்சிகளின் மற்றொரு விமர்சனமும் கவனிக்கத்தக்கது. எம்.ஜி.ஆரின் நலத்திட்டங்கள் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தினாலும், சாதி மற்றும் வர்க்க ஆதிக்கத்தின் அடிப்படை கட்டமைப்புகளை மாற்றும் அரசியல் போராட்டம் பலவீனமடைந்தது. வெகுஜன நலத்திட்ட அரசியல், சமூக மாற்ற அரசியலை மாற்றிவிட்டபோது, மத அடையாள அரசியலுக்கு வளர இடம் கிடைத்தது என்று அவர்கள் கருதினர்.

இதற்காக எம்.ஜி.ஆரை இந்துத்துவ அரசியல்வாதி என்று கூற முடியாது. அவரது ஆட்சி அனைத்து மத மக்களுக்கும் நலத்திட்டங்களை வழங்கியது. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரிடமும் அவர் ஆதரவைப் பெற்றிருந்தார். ஆனால், அரசியல் வரலாறு நோக்கங்களை மட்டும் அல்ல; விளைவுகளையும் மதிப்பிடுகிறது.

மீனாட்சிபுரத்தில் சாதியை எதிர்கொள்ளாமல் மதமாற்றத்தைப் பிரச்சினையாக்கிய அரசியல், மண்டைக்காட்டில் மதவெறி சக்திகளை உறுதியாக எதிர்க்காத அரசியல், "இந்து அமைப்புகளுக்கும் உரிமை உண்டு" என்ற மொழி ஆகியவை சேர்ந்து தமிழகத்தில் இந்துத்துவ அமைப்புகள் தங்களது சமூக அடித்தளத்தை விரிவுபடுத்தும் வாய்ப்பை உருவாக்கின என பல அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

மீனாட்சிபுரம் மதமாற்றச் சம்பவத்தை ஆர்.எஸ்.எஸ்.–இந்துத்துவ சக்திகள் முக்கிய அரசியல் ஆயுதமாக்கின. “இந்துக்கள் ஆபத்தில் உள்ளனர்”, “நாடு முழுவதும் மதமாற்றம் நடக்கிறது” என்ற பிரச்சாரத்தை நாடு முழுவதும் பரப்பி, அதை தேசியப் பிரச்சினையாக்கினர். இதுவே ரத யாத்திரையின் முக்கிய பிரச்சாரக் கதையாடல்களில் ஒன்றாக மாறியது. தமிழகத்தில் நடந்த காவல்துறை அடக்குமுறைகளையும் தங்களது பிரச்சாரத்திற்கு ஆதாரமாகச் சுட்டிக்காட்டினர். அத்வானி, வாஜ்பாய் உள்ளிட்ட பாஜக–ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் இதை நாடு முழுவதும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தனர். ஒரு உள்ளூர் சம்பவத்தை இந்துத்துவ அரசியலின் தேசியக் கருவியாக மாற்றினர்.
இதற்கு காவல்துறையும் அன்றைய அரசும் மேற்கொண்ட அடக்குமுறை துணைபோனது எனத் தோழர் திருமாவளவனும் தனது ஆய்வில் பதிவு செய்கிறார்.

திராவிட அரசியலின் பலவீனமான பக்கம்


எம்.ஜி.ஆரின் அரசியல் பாரம்பரியம் முரண்பாடுகள் நிறைந்தது. நலத்திட்ட அரசியலின் முன்னோடியாக இருந்தபோதிலும், மதச்சார்பின்மை, சாதி ஒழிப்பு, மதவெறி எதிர்ப்பு ஆகியவற்றில் திராவிட இயக்கத்தின் கருத்தியல் கூர்மை அவரது ஆட்சியில் தொடரவில்லை என்ற விமர்சனம் உள்ளது. தாராளமயமாக்கலும் உலக வங்கிக் கடன் பெறும் நடைமுறையும் அவரது ஆட்சிக் காலத்திலேயே தொடங்கின. மேலும், பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை விரிவுபடுத்த அம்பா சங்கர் ஆணையம் பரிந்துரைத்தபோதும், அதிகரித்த வேலைவாய்ப்பின்மையைச் சுட்டிக்காட்டி அதன் அமலாக்கம் ஒத்திவைக்கப்பட்டது..

தமிழகத்தில் இந்துத்துவ அரசியலை புரிந்துகொள்ள, R.S.S அல்லது பாஜகவை மட்டும் ஆய்வு செய்தால் போதாது. திராவிட அரசியலின் உள் முரண்பாடுகளையும், குறிப்பாக எம்.ஜி.ஆர் காலத்தில் உருவான அரசியல் சமரசங்களையும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. அந்த வகையில், எம்.ஜி.ஆரின் ஆட்சி இந்துத்துவ அரசியலை உருவாக்கவில்லை என்றாலும், அது வளர்வதற்கான அரசியல் களத்தை அமைத்தது.

- தொடரும்

Related Articles

திருப்பரங்குன்றம் - தடம் மாறுகிறதா த.வெ.க அரசு
Politics

திருப்பரங்குன்றம் - தடம் மாறுகிறதா த.வெ.க அரசு

இசாம் காலித் · August 3, 2026
டெல்லியில் ஒரு ஜல்லிக்கட்டு? CJP PROTESTS
Politics

டெல்லியில் ஒரு ஜல்லிக்கட்டு? CJP PROTESTS

ஹிஷாம் காலித் · July 24, 2026
ஜென்-Z என்னும் மாயை
Politics

ஜென்-Z என்னும் மாயை

கபில் , ஹிஷாம் · July 19, 2026
டிஜிட்டல் போர்க்களம்: ஒரு புதிய யதார்த்தம்
Politics

டிஜிட்டல் போர்க்களம்: ஒரு புதிய யதார்த்தம்

சேது சிவன், ரூமி · July 10, 2026
No BC (Muslim) Reservation?  Madras High Court struck down G.O.
Politics

No BC (Muslim) Reservation? Madras High Court struck down G.O.

Safdar · June 29, 2026
GHOST RIDERS - சென்னையின் கோஸ்ட் ரைடர்ஸ்
Politics

GHOST RIDERS - சென்னையின் கோஸ்ட் ரைடர்ஸ்

KEPIL · June 28, 2026
திருப்பரங்குன்றம் - தடம் மாறுகிறதா த.வெ.க அரசு
Politics

திருப்பரங்குன்றம் - தடம் மாறுகிறதா த.வெ.க அரசு

இசாம் காலித் · August 3, 2026
டெல்லியில் ஒரு ஜல்லிக்கட்டு? CJP PROTESTS
Politics

டெல்லியில் ஒரு ஜல்லிக்கட்டு? CJP PROTESTS

ஹிஷாம் காலித் · July 24, 2026
ஜென்-Z என்னும் மாயை
Politics

ஜென்-Z என்னும் மாயை

கபில் , ஹிஷாம் · July 19, 2026
டிஜிட்டல் போர்க்களம்: ஒரு புதிய யதார்த்தம்
Politics

டிஜிட்டல் போர்க்களம்: ஒரு புதிய யதார்த்தம்

சேது சிவன், ரூமி · July 10, 2026
No BC (Muslim) Reservation?  Madras High Court struck down G.O.
Politics

No BC (Muslim) Reservation? Madras High Court struck down G.O.

Safdar · June 29, 2026
GHOST RIDERS - சென்னையின் கோஸ்ட் ரைடர்ஸ்
Politics

GHOST RIDERS - சென்னையின் கோஸ்ட் ரைடர்ஸ்

KEPIL · June 28, 2026