Bread and RedBread and Red
ArticlesEnglishVideosPodcastsEditorialEventsInteractShop
HomeArticlesEnglishVideosPodcastsEditorialEventsInteractShop
Bread and RedBread and Red
SupportContact
Join Now

Copyright © 2026 Bread and Red

fXig
Politicssciencecasteeconomy

டெல்லியில் ஒரு ஜல்லிக்கட்டு? CJP PROTESTS

By ஹிஷாம் காலித்·July 24, 2026
4 min read
டெல்லியில் ஒரு ஜல்லிக்கட்டு? CJP PROTESTS

ஜல்லிக்கட்டு - எதிர்ப்பின் அரசியல் 


2017ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தை வெறும் பாரம்பரிய விளையாட்டிற்கான போராட்டமாக மட்டும் புரிந்துகொள்வது, அதன் அரசியல் முக்கியத்துவத்தைச் சுருக்கிவிடும். உண்மையில், அது தமிழகத்தில் பல ஆண்டுகளாகக் குவிந்திருந்த பொருளாதார மற்றும் சமூக அதிருப்திகள் ஒரே புள்ளியில் வெடித்தெழுந்த மக்களெழுச்சியாகும். ஜல்லிக்கட்டு அதன் உடனடிக் காரணம் மட்டுமே; அதன் பின்னால் இருந்தது பல ஆண்டுகளாகத் தேங்கியிருந்த பொருளாதார, சமூக நெருக்கடிகளே..

2016-ஆம் ஆண்டு தமிழகம்  காவிரி நீர் பிரச்சினை, விவசாயிகளின் தற்கொலைகள்,  கடுமையான வறட்சி, பணமதிப்பிழப்பின் பாதிப்பு, வர்தா புயல், முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தால் ஏற்பட்ட அரசியல் வெற்றிடம் என பல நெருக்கடிகளை ஒரே நேரத்தில் எதிர்கொண்டது. அடுத்ததாக, நான்கு மாதங்கள் நீடித்த பொருளாதார அழுத்தம் மக்களிடம் ஆழமான அதிருப்தியை உருவாக்கியது.

பணமதிப்பிழப்பு – ஒரு பொருளாதார பேரிடர்


பணமதிப்பிழப்பால் (Demonetisation)  மக்களின் கையிருப்பு பணம்தான் முடக்கப்பட்டது. தங்கள் சொந்த பணத்தை எடுக்க மக்கள் வங்கிகள், ஏடிஎம்கள் முன் நீண்ட வரிசையில் நின்றனர். ஒருகட்டத்தில் ஏடிஎம்களில் ₹4,000 மட்டுமே எடுக்க அனுமதிக்கப்பட்டது.

இந்த நடவடிக்கை, பெரும் தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கியது. அப்போது நிதி நெருக்கடியில் இருந்த வங்கி அமைப்புக்கு, மக்களின் பணத்தை வங்கிகளுக்குள் கொண்டு வர இது ஒரு வாய்ப்பாக அமைந்தது. "புதிய நோட்டில் சிப் உள்ளது", "கருப்புப் பணம் ஒழியும்" போன்ற கூற்றுகள் பரப்பப்பட்டன. ஆனால் அவற்றில் எதுவும் உண்மையாகவில்லை.

பணமதிப்பிழப்பால் சிறு வணிகம் முடங்கியது; தினக்கூலி தொழிலாளர்கள் வருமானத்தை இழந்தனர்; வாழ்வாதார நெருக்கடி தீவிரமடைந்தது. அதே நேரத்தில், ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அ.தி.மு.க. உள்கட்சி மோதலில் சிக்கியது. "தர்மயுத்தம்" அரசியல் உறுதியற்ற நிலையை உருவாக்க, மக்களின் பிரச்சினைகளுக்குச் செவி சாய்க்காத அரசு என்ற உணர்வு பரவியது.

அரசியல் வெற்றிடம்


ஆனால் இந்தக் கோபத்திற்கு அரசியல் வடிவம் கொடுக்கக்கூடிய சக்தி இல்லை. ஆளும் கட்சி தலைமையிழந்திருந்தது; எதிர்க்கட்சிகள் மக்களின் அதிருப்தியை ஒருங்கிணைக்க முடியவில்லை. தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புகள், மாணவர் இயக்கங்கள் தனித்தனியாகப் போராடினாலும், மாநிலம் முழுவதையும் இணைக்கும் அரசியல் தளம் உருவாகவில்லை.

இடதுசாரிகளும் முற்போக்கு இயக்கங்களும் சிதறிக் கிடந்தன. மக்கள் நலக் கூட்டணி என்ற ஜனநாயக அரசியல் முன்னெடுப்பு வர்க்க ஒற்றுமையின்றி கைவிடப்பட்டது. இதனால் மக்கள் நம்பிக்கையிழந்த நிலையில் இருந்தனர்.

அந்த வெற்றிடத்தில்தான் ஜல்லிக்கட்டு நுழைந்தது.

தமிழர் அடையாளம்


உச்சநீதிமன்றத்தின் தடை, கலாச்சார உரிமை மீதான தலையீடாகப் புரிந்துகொள்ளப்பட்டது. ஜல்லிக்கட்டு ஒரு விளையாட்டைத் தாண்டி, "தமிழர் அடையாளம்" என்ற அரசியல் குறியீடாக மாறியது. மெரினாவில் திரண்ட மக்கள் ஜல்லிக்கட்டு மட்டுமல்ல; விவசாயிகள், காவிரி, பணமதிப்பிழப்பு, மத்திய–மாநில உறவுகள், கார்ப்பரேட் ஆதிக்கம், வேலைவாய்ப்பின்மை, ஜனநாயக உரிமைகள் போன்ற பல்வேறு கேள்விகளையும் முன்வைத்தனர்.

அரசியல் அறிவியலில் இதை "Empty Signifier" (வெற்றிடத்தை நிரப்பும் குறியீடு) என்கிறார்கள். பல்வேறு சமூக அதிருப்திகளை ஒரே சின்னம் தன்னுள் உறிஞ்சி, பரந்த மக்கள் இயக்கமாக மாற்றும் தருணம் அது. 2017-ல் ஜல்லிக்கட்டு அந்தப் பங்கை வகித்தது.

தலைமையின்மை


இந்த இயக்கத்தின் மற்றொரு முக்கிய அம்சம் அதன் தலைமையின்மை. அரசியல் கட்சிகளை மக்கள் மேடைக்கு வர அனுமதிக்கவில்லை; சமூக ஊடகங்கள் ஒருங்கிணைப்பின் முக்கிய கருவியாக இருந்தன. லட்சக்கணக்கான மக்களை ஒன்றிணைத்தாலும், அதை நீண்டகால அரசியல் திட்டமாக மாற்றும் அமைப்பு இல்லாததால் இயக்கம் அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை.

பொருளாதார நெருக்கடி மட்டும் மக்கள் எழுச்சியை உருவாக்காது; அதற்கு அரசியல் திசையும் அமைப்பும் தேவை. அவை இல்லையெனில், அடையாள அரசியல் அந்த இடத்தை நிரப்பும். ஜல்லிக்கட்டு எழுச்சியில் விவசாயி, மாணவர், தொழிலாளர், மீனவர், சிறு வியாபாரி, ஐ.டி. ஊழியர், நடுத்தர வர்க்கம் என பல்வேறு சமூகப் பிரிவுகள் தமிழர் அடையாளத்தின் கீழ் ஒன்றிணைந்தன.


இதனால் இந்த எழுச்சியை சிலர் தமிழர் தேசிய உணர்வாகவும், சிலர் கூட்டாட்சி உரிமைப் போராட்டமாகவும், சிலர் கார்ப்பரேட் எதிர்ப்பு இயக்கமாகவும் வாசித்தனர். ஆனால், கடைசி வரை அடிப்படைப் பிரச்சினைகள் பேசப்படவும் இல்லை; தீர்வுகளும் காணப்படவில்லை. 

நவீன சமூகங்களில் மாற்றத்தை நோக்கிய வலுவான புரட்சிகர இயக்கமும், நடைமுறைச் செயல்பாடும் (Program & Praxis) இல்லையெனில், உருவாகும் அரசியல் வெற்றிடத்தை காட்சி அரசியலும் மாயப் பிம்பங்களும் ஆக்கிரமித்துவிடும் என்று மார்க்சிய சிந்தனையாளர் கி டெபோர் (Guy Debord) எச்சரிக்கிறார்.

அரசின் வன்முறையும் வரலாற்றுப் பாடமும் 


போராட்டத்தை கலைக்க காவல்துறை எடுத்த நடவடிக்கை முக்கிய திருப்பமாக அமைந்தது. அரசின் வன்முறைக்கு இரண்டு நோக்கங்கள் உள்ளன: ஒன்று, மக்களின் நம்பிக்கையை உடைப்பது; மற்றொன்று, அச்சத்தை விதைப்பது. அதன்பின் மெரினா முழுமையாகப் போராட்டங்களுக்கு மூடப்பட்டது.
"சமூக விரோதிகள் ஊடுருவிவிட்டனர்", "இயக்கம் திசைமாறிவிட்டது" என்று கூறி போராட்டத்தைக் கலைத்தனர்.

ஜல்லிக்கட்டு எழுச்சி ஒரு பாரம்பரிய விளையாட்டைப் பாதுகாக்கும் இயக்கம் மட்டுமல்ல. அது தமிழகத்தில் உருவான எதிர்ப்பின் அரசியல் வெற்றிடத்தை தற்காலிகமாக நிரப்பிய மக்கள் எழுச்சி. தமிழர் அடையாளத்தின் கீழ் பொருளாதார நெருக்கடி, கிராமப்புற விவசாயிகளின் துயரம், அரசியல் தலைமையின் நெருக்கடி, ஜனநாயக உரிமைக்கான தேடல் ஆகியவை ஒன்றிணைந்தன.

இந்த எழுச்சி ஒரு முக்கியமான பாடத்தை விட்டுச் சென்றது. மக்கள் தன்னெழுச்சியாக லட்சக்கணக்கில் ஒன்றுகூட முடியும். ஆனால் அந்த ஆற்றலை நிலையான அரசியல் மாற்றமாக மாற்ற கருத்தியல், ஒழுங்கமைப்பு, அரசியல் தலைமையின்றி முடியாது.

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு C.J.P...


ஜல்லிக்கட்டு எழுச்சிக்கு பத்து ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், வரலாறு மீண்டும் தன்னை நினைவுபடுத்துகிறது. Cockroach Janata Party போராட்டத்திலும் பிரச்சினை நீட் மட்டும் அல்ல.நீட் வினாத்தாள் கசிவு ஒரு தீப்பொறி மட்டுமே அதன் பின்னணியில் இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை, எதிர்கால நிச்சயமின்மை, ஒப்பந்த வேலை, விலைவாசி உயர்வு, கல்வி–வேலை இடைவெளி, மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகள் மீதான அதிருப்தி—இவை அனைத்தும் இளைஞர்களின் கோபமாக வெளிப்படுகின்றன. 

இந்தக் கூட்டமும் இதேபோல் வன்முறையால் கலைக்கப்படலாம். பின்னர் அரசு செவிசாய்ப்பது போல நாடகமாடும். இறுதியில், ஒரு தலைமுறையினரிடம் அதே அவநம்பிக்கையே மீண்டும் விதைக்கப்படும். 

அரசியலற்ற அரசியலைத் தாண்டி


"எந்த அரசியல் கட்சியுடனும், எந்தக் கொள்கையுடனும் இணையாதே" என்று இளைஞர்களிடம் இந்த அமைப்பு தொடர்ந்து கூறுகிறது. ஏன்?
ஏனெனில்,  அரசியல்மயமான இளைஞர்களே அதற்கு அச்சுறுத்தல்.
இளைஞர்கள் யதார்த்தத்தை உணர்ந்து, மாற்று சமூகத்தை நோக்கிச் சிந்திக்கக் கூடாது என்பதே அதன் நோக்கம். CJP கோரிக்கைப்படி அமைச்சர் ராஜினாமா செய்தாலும், அமைப்பே மாறுமா?
NEET, கல்வி -மருத்துவத்தின் வணிகமயமாக்கல், புதிய தொழிலாளர் சட்டங்கள், வேலைஇல்லாமை, விலைவாசி உயர்வு—இவை தொடர்ந்தே இருக்கும்.
ஆட்சியாளர்கள் அரசியலற்ற அரசியலைத் திணிக்கிறார்கள்; அது விடுதலைக்கான பாதை அல்ல. 

ஏன் இப்படிக் கூறுகிறோம் என்ற கேள்வி எழலாம். காரணம், இவ்வளவு பெரும் மக்கள் திரண்டதற்கான அடிப்படைக் காரணமான நவதாராளவாதத்தின் விளைவுகளான வேலைஇல்லாமையும், விலைவாசி உயர்வும் இன்றுவரை பேசப்படவில்லை.

முதலாளிகளும் ஆளும் வர்க்கமும் "விக்சித் பாரத்" என்ற தங்களின் எதிர்காலத் திட்டத்தை முன்வைத்துள்ளனர். அதற்கு மாற்றாக, மக்களின் நலனையும் சமூக நீதியையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு சோசலிச எதிர்காலத் திட்டத்தை இடதுசாரிகள் முன்வைக்க வேண்டிய நேரம் இது..

தன்னெழுச்சிப் போராட்டம் சுவாரசியமாகத் தோன்றலாம். ஆனால் திட்டமிட்ட வழிகாட்டலும் ஒழுங்கமைக்கப்பட்ட தலைமையும் இல்லையெனில், அது தனது இலக்கை அடைய முடியாது. தன்னெழுச்சி இயக்கங்கள் கட்டுப்பாட்டை இழந்தாலோ அல்லது வன்முறையால் திசைதிருப்பப்பட்டாலோ, அதன் பழி போராட்டக்காரர்கள் மீதே சுமத்தப்படும். எனவே, இளைஞர் இயக்கத்திற்கு இன்று தேவை வெறும் ஆதரவு அல்ல; இடதுசாரிய கருத்தியல் தலையீடும் , ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பும் , அரசியல் தலைமையும். அதுவே ஜல்லிக்கட்டு எழுச்சி விட்டுச் சென்ற மிக முக்கியமான அரசியல் பாடம்;  இன்றைய காலத்தின் அவசரத் தேவையும் அதுவே ஆகும்.

Related Articles

ஜென்-Z என்னும் மாயை
Politics

ஜென்-Z என்னும் மாயை

கபில் , ஹிஷாம் · July 19, 2026
டிஜிட்டல் போர்க்களம்: ஒரு புதிய யதார்த்தம்
Politics

டிஜிட்டல் போர்க்களம்: ஒரு புதிய யதார்த்தம்

சேது சிவன், ரூமி · July 10, 2026
No BC (Muslim) Reservation?  Madras High Court struck down G.O.
Politics

No BC (Muslim) Reservation? Madras High Court struck down G.O.

Safdar · June 29, 2026
GHOST RIDERS - சென்னையின் கோஸ்ட் ரைடர்ஸ்
Politics

GHOST RIDERS - சென்னையின் கோஸ்ட் ரைடர்ஸ்

KEPIL · June 28, 2026
இந்தியாவின் வளர்ச்சி: பொருளாதார முன்னேற்றமா அல்லது சமூக பின்னடைவோ?
Politics

இந்தியாவின் வளர்ச்சி: பொருளாதார முன்னேற்றமா அல்லது சமூக பின்னடைவோ?

டோரு கஸாம · June 20, 2026
மார்க்சியமும் பெரியாரின் நாத்திகமும்
Politics

மார்க்சியமும் பெரியாரின் நாத்திகமும்

சஞ்சய் ராமசாமி · June 19, 2026
ஜென்-Z என்னும் மாயை
Politics

ஜென்-Z என்னும் மாயை

கபில் , ஹிஷாம் · July 19, 2026
டிஜிட்டல் போர்க்களம்: ஒரு புதிய யதார்த்தம்
Politics

டிஜிட்டல் போர்க்களம்: ஒரு புதிய யதார்த்தம்

சேது சிவன், ரூமி · July 10, 2026
No BC (Muslim) Reservation?  Madras High Court struck down G.O.
Politics

No BC (Muslim) Reservation? Madras High Court struck down G.O.

Safdar · June 29, 2026
GHOST RIDERS - சென்னையின் கோஸ்ட் ரைடர்ஸ்
Politics

GHOST RIDERS - சென்னையின் கோஸ்ட் ரைடர்ஸ்

KEPIL · June 28, 2026
இந்தியாவின் வளர்ச்சி: பொருளாதார முன்னேற்றமா அல்லது சமூக பின்னடைவோ?
Politics

இந்தியாவின் வளர்ச்சி: பொருளாதார முன்னேற்றமா அல்லது சமூக பின்னடைவோ?

டோரு கஸாம · June 20, 2026
மார்க்சியமும் பெரியாரின் நாத்திகமும்
Politics

மார்க்சியமும் பெரியாரின் நாத்திகமும்

சஞ்சய் ராமசாமி · June 19, 2026