தமிழகத்தில் பெரியாரின் சமூகப் பங்களிப்பு மிக முக்கியத்துவமானதாகும். மூடநம்பிக்கை எதிர்ப்பு, மத நல்லிணக்கம், சாதி ஒழிப்பு, பகுத்தறிவு சிந்தனை அவர் ஆற்றிய பணிகள் சமூக மாற்றத்திற்கு பெரிதும் துணைபுரிந்தன. சமூகத்தில் நிலவிய சாதிக் கொடுமைகளும், பிராமண ஆதிக்கமும் அவரை நாத்திக மற்றும் பகுத்தறிவுச் சிந்தனைகளின் நோக்கி நகர்த்திய முக்கிய காரணிகளாக அமைந்தன.
நாத்திகம் இந்தியாவுக்கோ , தமிழ்ப் மரபுக்கோ புதியதல்ல. நாத்திக சிந்தனைகள் தமிழ் இலக்கியத்தில் வேரூன்றியிருந்தன, அது பொருள் முதல் வாதம் என்ற தத்துவ அடிப்படையில் விளக்கப்படுகிறது. பண்டைக்கால இந்தியப் பொருள்முதல்வாதிகளில் லோகாயதவாதிகள் / சார்வாகர்கள், முக்கிய இடம் பெற்றனர். வேதங்களை மறுப்பதே அன்றைய நாத்திகமாக இருந்தது. பண்டைய இந்தியாவில் பொருள்முதல்வாதத்தின் செல்வாக்கை மீமாம்சத் தத்துவ மரபிலும் காணலாம்.
நாத்திகமும் பெரியாரும்
நாத்திக சிந்தனைகளுக்கு நவீன காலத்தில் அரசியல் வடிவம் அளித்தவர்கள் தந்தை பெரியாரும் சிங்காரவேலரும் ஆவர். இவர்களின் சுயமரியாதை இயக்கம் சமூக மாற்றத்தில் மிகப் பெரிய பங்காற்றியது. 1931 முதல் 1936 வரை பெரியாரும் சிங்காரவேலரும் இணைந்து முன்னெடுத்த “சமதர்ம சுயமரியாதை இயக்கம்” நாடையும் ஆட்சியையும் பெரிதும் அதிரவைத்தது. “காசிக்குச் சென்றால் சொர்க்கம் கிடைக்கும்” என்ற மூடநம்பிக்கையில் சிக்கியிருந்த மக்களை, பகுத்தறிவுநோக்கி வழிநடத்தியது.
ஏகாதிபத்தியமும் மதவாதமும் சமூகத்தின் மிகப் பெரிய நோய்கள் என்று எவருக்கும் அஞ்சாமல் வலியுறுத்தினர். பகுத்தறிவு, சமூக நீதி, தொழிலாளர் உரிமைகள் மற்றும் சமத்துவம் ஆகியவற்றை தனது அரசியல் மற்றும் சமூகப் பணிகளின் மையமாகக் கொண்டனர். சென்னையில் நாத்திகர் மாநாட்டை நடத்தினர்; அது இந்தியாவிலயே யாரும் செய்யாத காரியம். ஆனால் பிரிட்டிஷ் ஆட்சியின் அழுத்தம் காரணமாக, பெரியார் அந்த அரசியல் பாதையிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டார். அன்று பிரிட்டிஷ் அரசு, ஆர்.எஸ்.எஸ். (RSS) மற்றும் மதவாத அரசியலைப் பயன்படுத்தியது போலவே, இன்று அமெரிக்க ஏகாதிபத்தியமும்இந்துத்துவ இயக்கத்தின் இத்தகைய செயல்பாடுகளை மறைமுகமாக ஆதரித்து வருகிறது. ஆனால் இதில் உள்ள முரண் என்னவென்றால், திராவிட இயக்கமோ அல்லது பகுத்தறிவாளர்களோ இதனை எதிர்த்துப் போராடுவார்களா என்பது எப்போதும் ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது.
பெரியாரைப் பொறுத்தவரை, நாத்திகம் என்பது சமூகத்தில் நிலவிய சாதி ஒடுக்குமுறை, மூடநம்பிக்கைக்கு எதிராக மற்றும் சமூக நீதி, பாலின சமத்துவதிற்கான ஒரு கருவியாக இருந்தது. பெரியாருக்குப் பிறகு அண்ணா, திராவிட இயக்கம், இடதுசாரிகள் ஆகியோரின் வழியாக அது தொடர்ந்தபோதிலும், பெரும்பாலும் அவை மேடைப் பேச்சுகளிலும் முழக்கங்களிலும் மட்டுமே இருந்தன. சமூகத்திற்கு செல்லாமல் குறுகிய வரம்பிற்குள் சுருங்கிவிட்டதாக கருதப்படுகிறது.
அறிவியல் நாத்திகத்தின் அவசியம்
மார்க்சியர்களுக்கு நாத்திகம் என்பது வெறும் “கடவுள் இல்லை” என்று சொல்வது அல்ல. மதம் எப்படி தோன்றியது, ஏன் மக்கள் அதில் நம்பிக்கை வைக்கிறார்கள்? என்பதைக் கண்டறியும் அறிவியல் ஆய்வு. இங்கு நாத்திகம் என்பது சமூக பார்வையுடன்தத்துவார்த்த அணுகுமுறையின் விளக்கப்படுகிறது.
மார்க்ஸ் சொன்னார்:
“மதம் என்பது இதயமற்ற உலகின் இதயத்துடிப்பு, உயிரற்ற சமூக நிலைமையின் உயிர்ப்பாக இருப்பதுபோல், ஒடுக்கப்பட்ட மனிதனின் பெருமூச்சாக உள்ளது. அது மக்களின் அபினி.”
"Religion is opimum of the masses"
இங்கே சிலர் “ஓப்பியம்” என்ற சொல்லை மட்டும் பிடித்து, மார்க்ஸ் மதத்தை ஒரு போதைப்பொருளுடன் ஒப்பிட்டார் என்று தவறாக விளக்குகிறார்கள். ஆனால் 19ஆம் நூற்றாண்டில் ஓப்பியம் என்பது சட்டபூர்வமான மருந்து; கடுமையான வலி, தாங்க முடியாத நோய்களுக்கு மருத்துவர்கள் அளித்த வலி நிவாரணி. அது தற்காலிக நிவாரணம் அளித்தாலும், நோயின் அடிப்படை காரணத்தை குணப்படுத்தாது. அதைப் போலவே, மதமும் மனிதனின் துன்பத்துக்கு தற்காலிக ஆறுதல் அளிக்கிறது. ஆனால் அந்தத் துன்பத்தை உருவாக்கும் அடிப்படைச் சமூக–பொருளாதார காரணங்களை நீக்க முடியாது.
ஆகவே மக்களின் துன்பத்தை ஒழிக்க, தற்போதைய சமூகப் பொருளாதார அமைப்பை மாற்ற வேண்டும் என்கிறார்கள் . சமூக பொருளாதார கட்டமைப்பை மாற்றுவதற்கான சிகிச்சை வர்க்கப் போராட்டம் என்று அழைக்கப்படுகிறது.
பெரியாரின் பங்களிப்பும் மாற்றங்களும்
பெரியார் தனது காலத்தில் பிராமணிய ஆதிக்கத்தைக் கடுமையாகச் சவாலிட்டார். சுயமரியாதையும் துணிச்சலையும் மக்களிடம் விதைத்தார். இது அவரது மறுக்க முடியாத பங்களிப்பு.
ஆனால், பகத்சிங்கின் நாத்திகத்தையோ அல்லது உழைக்கும் மக்களின் போராட்டத்தை முன்னெடுத்த தோழர் ஜீவானந்தத்தின் வழியையோ பெரியார் தொடரவில்லை. அந்த நாத்திகம் அரசியல் விழிப்புணர்வில் வேரூன்றியது. பெரியாரின் நாத்திக நிலைப்பாடு வர்க்கப் பார்வையைக் கொண்டிருக்கவில்லை; அது ஆளும் வர்க்க மோதலின் எல்லைக்குள் இருந்தது. இதனால், அவரது நாத்திகக் கருத்துகள் ஆளும் வர்க்கத்தினருக்குள் இருந்த பிராமணர்கள் மற்றும் நிலப்பிரபுச் சாதிகளுக்கிடையேயான அதிகாரப் போட்டியில், நிலவுடைமையாளர்கள் மற்றும் இடைநிலைச் சாதிக் குழுக்கள் முன்னேறுவதற்கு வழிவகுத்தன. சாதி அமைப்பை முழுமையாக ஒழிப்பதற்குப் பதிலாக, ஆளும் வர்க்கக் கருத்தியலின் ஒரு பிரிவிலிருந்து மற்றொரு பிரிவுக்குத் தலைமையும் ஆதிக்கமும் மாறுவதற்கே இது பெரும்பாலும் உதவியது. பெண் விடுதலை மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அவரது போராட்டங்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. இருப்பினும், ஒட்டுமொத்தமாக தொழிலாளர் வர்க்கத்தினரையும் தலித் மக்களையும் முழுமையாக விடுவிக்கும் மாற்றத்தை இந்த அணுகுமுறை கொடுக்கவில்லை. இன்றைய சூழலில், வரட்டு நாத்திக அணுகுமுறை இடதுசாரி இயக்கத்திலிருந்து தனிமைப்படுத்தவும், வகுப்புவாத சக்திகளுக்கு சாதகமாகவும் உதவக்கூடும்.
நாத்திகமும் சமூக பார்வையும்
இந்திய நாத்திகத்தை தத்துவ அடிப்படையில் வளர்த்தவர் தேவி பிரசாத் சட்டோபாத்யாயா. இந்தியதத்துவத்தில் , அறிவியல் சிந்தனையில் அவர் ஏற்படுத்திய தாக்கம் பல வரலாற்றாசிரியர்களைக் காட்டிலும் ஆழமானது.
தமிழகத்தில் தோழர் சிந்தன் மற்றும் தோழர் வானமாமலை நாத்திகத்தை வரலாற்று மற்றும் சமூக அடிப்படையில் விளக்கி, அதை முற்போக்கு சிந்தனையோடு இணைத்தனர். இவர்களின் படைப்புகள் தமிழ்ச் சமூகத்தை பெரியாரின் சிந்தனையைத் தாண்டி, தத்துவ அடிப்படையிலான முற்போக்குப் பாதைக்கு அழைத்துச் சென்றன. இந்த தத்துவ அடிப்படை (Dialectical Materialism) இயங்கியல் பொருள்முதல்வாதம்என அழைக்கப்படுகிறது.
இன்றைய இளைஞர்களுக்கு புத்தகங்கள், புதிய சிந்தனைகள் மற்றும் உலகளாவிய பார்வைகளை அணுகும் வாய்ப்புகளை டிஜிட்டல் உலகம் வழங்குகிறது. இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஆழமான புரிதலை வளர்த்துக்கொள்வது காலத்தின் தேவையாகும். பெரியார் விதைத்த பகுத்தறிவு மரபை மதிப்பதோடு, தேபிபிரசாத் சட்டோபாத்யாயா, தோழர் சிந்தன், நா. வானமாமலை ஆகியோரின் படைப்புகளையும் அறிந்துகொள்வது பகுத்தறிவை மேலும் வலுப்படுத்துவதோடு, புதிய பார்வையையும் வழங்குகிறது. இது கடினமா? என்ற கேள்விக்கு, "எளிமைதான்" எனப் பாரதிதாசன் பதிலளிக்கிறார்.
உடல் உழைப்பு இலாத செல்வர் உலகை ஆண்டு உலாவலும் கடவுள் ஆணை என்று உரைத்தகயவர் கூட்டம் மீதிலே கடவுள் என்ற கட்டறுத்துத் தொழிலாளரை ஏவுவோம்!
"கடவுள் என்ற கட்டறுத்துத் தொழிலாளரை ஏவுவோம்!" என மதமும், வர்க்க ஆதிக்கமும் எவ்வாறு உழைக்கும் மக்களின் மீது திணிக்கப்படுகின்றன என்பதை சுட்டிக்காட்டுகிறார். இந்தச் சிந்தனைகள் கலை, இலக்கியம், திரைப்படம் என சமூகத்தின் அனைத்து தளங்களிலும் பிரதிபலிக்க வேண்டிய தேவை உள்ளது.
அத்தகைய சமூகக் கண்ணோட்டங்களும் வர்க்கப் பார்வையும் முக்கியமானவை என்று மார்க்சியர்கள் கூறுகின்றனர், காரணம்...தத்துவார்த்த புரிதல் இல்லாத நாத்திகம் ஆளும் வர்க்கத்தின் ஒரு கருவியாக மட்டுமே மாறிவிடுகிறது. பெரியாரின் நாத்திகம் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு, அதை சுவீகரிக்கும் வேலையை இன்று த.வெ.க அரசு செய்கிறது
இன்றைய தமிழ்நாட்டுச் சூழலில்
நடிகரும் இன்றைய முதலமைச்சருமான விஜய் தலைமையிலான த.வெ.க (TVK) அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்நாட்டில் வலதுசாரி மற்றும் மதவாத அரசியல் போக்குகள் அதிகரித்து வருகின்றன. அரசை வழிநடத்தும் தலைவர்கள் கூட ஜோதிடம், யாகம், மந்திரம் ஆகியவற்றை நம்பும் நிலை இன்று தமிழகத்தில் காணப்படுகிறது.அரசு முடிவெடுப்பதில் ஜோதிடர்களின் கருத்துக்கள் பரிசீலிக்கப்படுவது ஆரோக்கியமான அறிகுறியல்ல. எனவே, சமூகத்தை மீண்டும் பகுத்தறிவின் பாதையில் நகர்த்துவது அவசியமாகிறது. குறிப்பாக, பொருளாதார நெருக்கடி நிலவும் காலங்களில் இது மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. வரலாறு காட்டுவது என்னவென்றால், பொருளாதார நெருக்கடிகளை மதவாத சக்திகள் தங்களது அரசியல் வளர்ச்சிக்குப் பயன்படுத்தியுள்ளன.
1991-க்குப் பிந்தைய காலகட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. வளர்ச்சியடைந்து. அதன் விளைவாக அயோத்தி அரசியல் நாடு முழுவதும் தீவிரமடைந்தது, நெருக்கடியை பயன்படுத்தி பாபர் மசூதி சம்பவம் நிகழ்ந்தது.
சமூகவியல் மாணவர் விஸ்வா பின்வருமாறு கூறுகிறார்:
"முசோலினியும் சாவர்க்கரும் நாத்திகர்களாக இருந்தவர்கள். ஆனால் அவர்கள் முன்னெடுத்தது பாசிசமும் மதவெறி அரசியலும்தான். எனவே, சமூக நல்லிணக்கத்திற்கோ மதவெறி அரசியலை எதிர்ப்பதற்கோ நாத்திகம் மட்டும் போதுமான அளவுகோல் அல்ல. பகத் சிங் கூறியதுபோல், மதவெறி அரசியலால் யார் லாபமடைகிறார்கள்? அதன் பின்னால் எந்த வர்க்க நலன்கள் செயல்படுகின்றன ? என்பதைப் புரிந்துகொள்ளும் தெளிவான வர்க்கப் பார்வையே அவசியம்.
இன்று மத அரசியலின் ஒரு பகுதியாக, திருப்பரங்குன்றம் முருகன் கோயில் குறிவைக்கப்படுகிறது . ‘வடக்கே ராமன், தெற்கே முருகன்’ என்ற முழக்கங்கள், மத அரசியலை வலுப்படுத்தும் முயற்சிகளாகவே பார்க்கப்படுகின்றன. இத்தகைய சூழலில், பகுத்தறிவுச் சிந்தனையோடு வர்க்கப் பார்வையையும், மத நல்லிணக்கத்தையும் இணைத்து நாம் வளர்க்க வேண்டும்.
இதை பற்றி சமூகவியல் ஆய்வாளர் விஸ்வநாதன் கூறுகையில்;
ஹிந்துத்துவமும் முதலாளித்துவச் சுரண்டலும் இன்றைய சூழலில் மிகப்பெரிய சவால்கள்.இதை எதிர்கொள்வதற்கு வெறும் வறட்டு நாத்திகம் போதாது. வர்க்கப் பார்வையுடன் கூடிய அறிவியல் நாத்திகம்தான் சாதி, சமயம், முதலாளித்துவம் கட்டிய சுவர்களை உடைத்து, உண்மையான மக்கள் ஆட்சியை நோக்கி தமிழ்நாடு முன்னேற முடியும் என்கிறார்..
மேலும் இதை தெளிவு படுத்தும் வகையில் , முதலில் மதத்தையும் அரசையும் பிரிக்க வேண்டும். மதம் அரசை வழிநடத்தக் கூடாது; அது தனிநபரின் சொந்த நம்பிக்கையாக மட்டுமே இருக்க வேண்டும், அப்போதுதான் உண்மையான சமூக நீதி, மத நல்லிணக்கம் சாத்தியமாகும் என்கிறார்கள் இடதுசாரிகள். அதற்கு இளைஞர்களுக்கு அரசியல் விழிப்புணர்வு தேவைப்படுகிறது. அதன் ஊடாக அடுத்த தலைமுறைகளுக்கு அரசியல் அறிவை கடத்த முடியும் . ஏனெனில், ஒரு சமூகமாக நாம் கூட்டாக வளர இப்போது அத்தகைய வாய்ப்பு கிடைக்கிறது.