"இன்றைய அரசியல் போட்டி , தேர்தல் மேடைகளைவிட மொபைல் திரைகளில் தான் அதிகம் நடைபெறுகிறது. இதில் தகவல் தொழில்நுட்பப் (IT WING) அணிகள் ஒருவகையில் 'நிழல் ராணுவம்' போலச் செயல்படுகின்றன" என்கிறார் ஊடகவியலாளர் சேது சிவன்.
நமது தோழர் 'ரூமி' உடனான அவரது நேர்காணல் பின்வருமாறு:
ரூமி: தலைப்புக்குச் செல்லும் முன், நீங்கள் சமூக வலைத்தளங்களை எப்போது பயன்படுத்தத் தொடங்கினீர்கள்?
சேது சிவன்:
நான் சமூக வலைத்தளங்களை தீவிரமாக பயன்படுத்தத் தொடங்கியது 2016 க்கு பிறகு தான். ஆரம்பத்தில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் ஆகியவை முக்கிய தளங்களாக இருந்தன. அதே காலகட்டத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, ஃபேஸ்புக்கில் மீம்கள், குறும்படங்கள், சிறிய பதிவுகள் போன்றவை அரசியல் கருத்துகளைப் வெளிப்படுத்தும் புதிய மொழியாக உருவெடுத்தன.
ரூமி: 2016-இல் இருந்த சூழலுடன் ஒப்பிடும்போது, இன்று என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன?
சேது சிவன்:
முன்பு நாளிதழ்கள், தொலைக்காட்சி, சினிமா போன்ற ஊடகங்கள் மக்களின் கருத்துகளைப் பாதித்தன. ஆனால் சமூக வலைத்தளங்கள் அதைவிட ஒரு படி மேலே செல்கின்றன. சமூக வலைத்தளங்களில், கவனத்தை ஈர்க்கும் தந்திரங்கள், உணர்ச்சிகளைத் தூண்டும் முறைகள் வழியாக மக்களின் அரசியல் உணர்வுகளும் சமூகப் பார்வைகளும் உருவாக்குகின்றன. அவை தகவலை மட்டும் வழங்குவதில்லை; மக்கள் எப்படி சிந்திக்க வேண்டும், ஒரு விசயத்தை எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதையும் தொடர்ந்து வடிவமைக்கப்படுகின்றன.
அன்றைய சூழலில் மக்கள் தங்களுடைய கருத்துகளை பெருமளவு தன்னிச்சையாகவேப் பகிர்ந்தனர். ஒருங்கிணைக்கப்பட்ட டிஜிட்டல் அரசியல் நிறுவனங்கள் (Political Strategy Companies) இன்றைய அளவுக்கு வளரவில்லை.
பெருந்திரளான மக்களின் கருத்துக்களையும் பழக்கவழக்கங்களையும் திட்டமிட்டு தந்திரமாக வடிவமைப்பதும் வழிநடத்துவதும், ஜனநாயக சமூகத்தின் தவிர்க்க முடியாத கூறாகும்.
- எட்வர்ட் பெர்னேய்ஸ், பிரச்சாரம் (Propaganda), 1928
ரூமி:
சமூக ஊடகங்கள் - மக்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கத்தின் முக்கிய தொடக்கம் எங்கே? ஏன்?
சேது சிவன்:
இந்தியாவில் ஜியோ 4G அறிமுகமும், பரவலான இணையப் பயன்பாடும் சமூக வலைத்தளங்களின் வேகமான வளர்ச்சிக்கு அடித்தளமிட்டன. 4G இணைய சேவை பயன்பாட்டுக்கு வந்த சில மாதங்களிலேயே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில், சமூக வலைத்தளங்களின் தாக்கம் வெளிப்பட்டது. அதன் பிறகு 2018 முதல் யூடியூப், ட்விட்டர் ஆகியவற்றின் பயன்பாடும் அரசியல் செல்வாக்கும் வேகமாக அதிகரித்தன.
ஆனால் மிகப் பெரிய மாற்றம்
கொரோனா ஊரடங்குக் காலத்தில்தான் ஏற்பட்டது. அதில் அனைவரும் இணையத்தைப் பயன்படுத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டனர், இன்று சுமார்
50 கோடி இந்திய மக்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துகிறார்கள்.
ரூமி: தமிழ்நாட்டில் சமூக வலைத்தளங்கள் எப்போது அரசியல் செல்வாக்கு செலுத்தத் தொடங்கின?
சேது சிவன்:
என்னுடைய பார்வையில் 2021 சட்டமன்றத் தேர்தல் முக்கியமான திருப்புமுனை. அந்தத் தேர்தலுக்குப் பிறகு ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்கள் வெறும் கருத்துப் பரிமாற்ற இடங்களாக இல்லாமல், திட்டமிட்ட அரசியல் பிரச்சாரக் களங்களாக மாறின. அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, அவர்களை ஆதரிக்கும் டிஜிட்டல் குழுக்கள், இன்ஃப்ளூயன்சர்கள், மீம் பக்கங்கள், ரசிகர் மன்ற பக்கங்கள் என பல அடுக்குகள் உருவாகின. சமூக வலைத்தள அரசியல் செல்வாக்கும் வேகமாக அதிகரித்தன.
அதே நேரத்தில் Behindwoods, Vijay TV, Zee-ன் தமிழா தமிழா போன்ற பொழுதுபோக்கு தளங்களில்கூட அரசியல் விவாதங்களும் பிரச்சாரங்களும் அதிகரித்தன. இதனால் அரசியல் என்பது தேர்தல் நேரத்தில் மட்டும் பேசப்படும் விஷயமாக இல்லாமல், மக்களின் அன்றாட அனுபவத்தின் ஒரு பகுதியாக மாறியது. கேளிக்கையும் பொழுதுபோக்கும் நிறைந்த இடம் அதன் பின் ஒரு முழுமையாக அரசியல் போர்க்களமாக மாறியது.
ரூமி: சமூக வலைத்தளங்கள் ஒரு அரசியல் போர்க்களம் என்றும் நீங்கள் கூறுகிறீர்கள்?
அதற்கு என்ன பொருள்?
சேது சிவன்:
நவீன சூழலில் அரசியல் கட்சிகளும் Political Strategy நிறுவனங்களும் இணைந்து, சிலந்தி வலை போல ஒன்றோடொன்று இணைந்த ஒரு டிஜிட்டல் வலையமைப்பை (Digital Ecosystem) உருவாக்கியுள்ளன. இவற்றை வைத்து பல தளங்களில் மக்களின் மனதில் எந்தக் கருத்து மேலோங்க வேண்டும் என்பதற்கான போட்டி நடக்கிறது, இது ஒரு விதமான தகவல் போர் என்று சொல்லலாம்.
2014-ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, இந்திய அரசியலில் தகவல் தொழில்நுட்பப் பிரிவுகள் ஒரு புதிய கட்டத்தை எட்டின. ஆரம்பத்தில் இயல்பான கருத்துப் பரிமாற்றமாக இருந்தது, படிப்படியாக திட்டமிட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட தகவல் பரப்பும் இயந்திரமாக மாறியது. இதில் மேலும் போட்காஸ்ட், A.I bots போன்றவை மக்களின் அரசியல் புரிதலைக் கட்டமைக்கும் சக்திகளாக பரிணமித்துள்ளன.
பெரும்பாலும் ஒவ்வொரு முதலாளித்துவ அரசியல் கட்சியும் சமூக ஊடகங்களைக் கையாள்வதற்காகத் தனி ஐடி (IT) பிரிவை அமைத்துள்ளது, இதில் ஆயிரக்கணக்கானோர் சம்பளத்திற்கு பணியமர்த்தப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் இதே கதை தான் , இந்த "டிஜிட்டல் படைகள்" எவ்வாறு அரசியலையும் மக்களின் மனநிலையையும் பாதிக்கின்றன என்பதை
The Great Hack ஆவணப்படம் தெளிவாகக் சுட்டிக்காட்டியது.
ரூமி:
உலகளவில் இதற்கான உதாரணங்களைச் சொல்ல முடியுமா?
சேது சிவன்: அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப், இந்தியாவில் நரேந்திர மோடி, பிரேசிலில் ஜெயிர் போல்சனாரோ ஆகியோரின் டிஜிட்டல் அரசியல் முக்கிய உதாரணங்கள். தற்போது தமிழ்நாட்டில் தவெக வளர்ச்சி, சமூக வலைத்தளங்கள் அரசியல் ஆதரவையும் எதிர்ப்பையும் திரட்டும் முக்கிய அதிகாரமாக மாறியிருப்பதை காட்டுகிறது.
இங்கு ஒரு உண்மையைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். சமூக வலைத்தளங்கள் அரசியல் யதார்த்தத்தை உருவாக்குவதோடு, ஏற்கனவே இருக்கும் சமூக பிளவுகள், அரசியல் முரண்பாடுகளை தீவிரப்படுத்தி, அவற்றையே ஒரு அரசியல் கட்சியின் வளர்ச்சிக்கு வசதியாக மாற்றுகின்றன.
ரூமி: சமூக வலைத்தளங்களில் மக்கள் சுதந்திரமாக செயல்படுகிறார்களா?
சேது சிவன்:
சுதந்திரம் இருக்கிறது. ஆனால் அது வரையறுக்கப்பட்ட சுதந்திரம்.
நாம் விரும்பி தேர்வு செய்கிறோம் என்று தோன்றினாலும், உண்மையில் எந்த கருத்து நமக்குக் காட்டப்பட வேண்டும், எது அதிகம் பரவ வேண்டும் என்பதை தளங்களின் அல்காரிதங்களே தீர்மானிக்கின்றன. சில நேரங்களில் ஆட்சியை விமர்சிக்கும் கருத்துகள், பதிவுகள் நீக்கப்படுகின்றன அல்லது கட்டுப்படுத்தப்படுகின்றன, அதே சமயம் வெறுப்பைத் தூண்டும் சில பதிவுகள் கட்டுப்பாடின்றி நீடிக்கின்றன.
எடுத்துக்காட்டாக,
துருவ் ரத்தி - இந்துத்துவம் மற்றும் பாஜக ஆதரவாளர்களின் தாக்குதல்கள் குறித்து வெளியிட்ட வீடியோவுக்கு தடை விதிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டது; அதே சமயம்,
அசாம் முதல்வர் முஸ்லிம்களைச் சுடுவது போல பதிவிட்ட வீடியோ கட்டுப்பாடின்றி வைரலாகியது. ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, அதனால் இந்த தளங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குரியது . அதே போல இந்தச் சுதந்திரமும் அதிகாரத்திற்கு ஆதரவாக இருக்கிறதா? இல்லையா? என்பதை பொறுத்தது,
அது
அனைவருக்குமானது அல்ல.
தகவல் தொழில்நுட்பப் அணிகள் வெறும் தேர்தல் பிரச்சாரக் குழு அல்ல; அவை ஒருவகையில் ‘நிழல் ராணுவம்’ போலச் செயல்படுகின்றன. இன்று மோதல், சர்ச்சை போன்றவற்றுக்கே அதிக முன்னுரிமை வழங்கப்படுகிறது .... இதனால் அரசியல் உரையாடலுக்கான சூழலே திட்டமிட்டுச் சிதைக்கப்படுகிறது
ரூமி: எதன் அடிப்படையில் நீங்கள் அந்த முடிவுக்கு வந்தீர்கள்? சமூக வலைத்தளங்கள் நடுநிலையானவை இல்லையா?
சேது சிவன்:
இல்லை, குறிப்பாக எலான் மஸ்க் ட்விட்டரைப் பொறுப்பேற்ற பிறகு, X தளத்தின் வலதுசாரி அரசியல், பாசிச கருத்துகளுக்குக் கிடைக்கும் முக்கியத்துவமும் பிரபலமான வீச்சும் (popularity) மற்ற கருத்துகளுக்குக் கிடைப்பதில்லை. மோதல், சர்ச்சை போன்றவற்றுக்கே அதிக முன்னுரிமை வழங்கப்படுகிறது. நாளடைவில், அல்காரிதம் உருவாக்கும் காட்சியையே சமூகத்தின் உண்மையான நிலை என்று மக்கள் நம்பத் தொடங்குகிறார்கள்.

அதேபோல, டிஜிட்டல் தளங்களில் தனியுரிமை மீறல்களும் தரவு திரிப்பும் அதிகரித்து வருகின்றன. ஆனால் அவை குறித்த போதிய விழிப்புணர்வு இந்தியாவில் இன்னும் இல்லை.
ரூமி: நீங்கàள் செய்தித் துறைக்கும், இத்தகைய அரசியல் பார்வைக்கும் எப்படி வந்தீர்கள்?
சேது சிவன்:
என்னுடைய அரசியல் பயணம் DYFI-யில் தொடங்கியது. கொரோனா காலத்தில், அரசியல் சிந்தனைகளில் ஆர்வமுள்ள இளைஞர்கள் உருவாக்கிய
'தமிழ் மார்க்ஸ்' குழுவில் செயல்படத் தொடங்கினேன். அங்கு இடதுசாரி அரசியல், சர்வதேச அரசியல் மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து விவாதித்தோம். மார்க்சிய அரசியல், வர்க்கப் பார்வை ஆகியவற்றை ஆழமாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
அதன் அடுத்த கட்டமாக,
தீக்கதிர் நாளிதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினேன். அங்கிருந்து ஒரு ஊடகவியலாளராக சமூக, அரசியல் மாற்றங்களை கவனித்து வருகிறேன்.
ரூமி: அரசியல் கட்சிகளின் ஐ.டி. பிரிவுகள் சமூக சிந்தனையை பாதிக்கின்றவாa?
சேது சிவன்: நிச்சயமாக. மக்களின் பிரச்சினைகளைப் பேசுவதைவிட, ஒரு குறிப்பிட்ட பிம்பத்தையும் பொதுக்கருத்தையும் உருவாக்குவதில்தான் அவர்கள் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.
எட்வர்ட் பெர்னீஸ் (Edward L. Bernays) தனது Propaganda நூலில், நவீன ஜனநாயகத்தில் பொதுக் கருத்தைத் திட்டமிட்டு வடிவமைக்க முடியும் என்று விளக்குகிறார். இன்று பல அரசியல் சக்திகள் பிம்பக் கட்டமைப்பை (Perception Building) தங்களுடைய ஓரே அரசியல் உத்தியாகப் பயன்படுத்துகின்றன. அவர்களை பொறுத்த வரையில் டிரெண்ட் ஆகும் விஷயம் முக்கியமானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
ஒரு கட்சி அல்லது தலைவரைச் சுற்றி தொடர்ந்து பேசுபொருளை உருவாக்குவது, "அவரால் மட்டுமே மாற்றம் சாத்தியம்" என்ற பிம்பத்தை வலுப்படுத்துவதுதான் இலக்கு. ஹேஷ்டேக்கு பிராண்டிங் (Branding), கருத்து கணிப்புகள், அல்காரிதம் சார்ந்த பிரச்சாரம், இணையவழி அணிதிரட்டல் போன்ற அனைத்தும் இதன் ஒரு பகுதியாகும். அதனால், டிரெண்டாகும் அனைத்தும் மக்களின் உண்மையான பிரச்சினைகளை பிரதிபலிப்பதில்லை; பல நேரங்களில் அவை மக்களின் கவனத்தைத் திசைதிருப்புகின்றன.
எரிக் ஃப்ரோம் (Erich Fromm) தனது The Sane Society நூலில், "நவீன முதலாளித்துவம் நுகர்வு கலாச்சாரத்தில் மூழ்கிய, எளிதில் கட்டுப்படுத்தப்படக்கூடிய மனிதனை தான் உருவாக்குகிறது" என்கிறார் . அத்தகைய சமூகத்தில், பொய்களைத் திரும்பத் திரும்பப் பரப்பியும், அச்சம் மற்றும் உணர்ச்சிகளைத் தூண்டியும் மக்களின் சிந்தனையை வடிவமாகவும் முடியும் என்று கூறுகிறார். இன்று சமூக வலைத்தளங்கள் இந்த உத்திகளை முன்பைவிட வேகமாகவும் பரவலாகவும் செயல்படுத்துகின்றன.
ரூமி:
இதனால் அரசியல் விவாதம் செயற்கையாக மாறுகிறதா?
சேது சிவன்:
செயற்கையாக அல்ல. ஆனால் மிகவும் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட ஒன்றாக மாறியுள்ளது.
தகவல் தொழில்நுட்பப் பிரிவுகளை வெறும் தேர்தல் பிரச்சாரக் குழு அல்ல; அவை ஒருவகையில் ‘நிழல் ராணுவம்’ போலச் செயல்படுகின்றன.
மேலும், எதிர்ப்புக் கருத்துகளும் மாறுபட்ட கண்ணோட்டங்களும் மக்களைச் சென்றடைவதைத் தடுக்க, போலிப் புகாரளித்தல், கணக்குகளை முடக்குதல் (Ban) போன்ற உத்திகளை இவர்கள் பயன்படுத்துகின்றனர். எது அதிகம் தெரியும், எது மறைக்கப்படும் என்பதை அல்காரிதங்களும் அரசியல் ஆதிக்கமும் தீர்மானிக்கின்றன. முக்கியமான பிரச்சினை, இதனால் அரசியல் உரையாடலுக்கான சூழலே திட்டமிட்டுச் சிதைக்கப்படுகிறது.
ரூமி:
இது பாரம்பரிய கள அரசியலை பலவீனப்படுத்துகிறதா?
சேது சிவன்:
அப்படி நான் கூறமாட்டேன். கள அரசியல்/ Ground politics இன்னும் மிக முக்கியமானது. தொழிற்சங்கங்கள், மாணவர் இயக்கங்கள், விவசாயிகள் அமைப்புகள், மக்களுடன் நேரடியாக பணிபுரியும் இயக்கங்கள்—இவை எதையும் சமூக வலைத்தளங்கள் மாற்ற முடியாது.
சமூக வலைத்தளங்கள் ஆதரவாளர்களை உருவாக்கலாம். ஒரு கருத்துக்கு அனுதாபத்தை உருவாக்கலாம். ஆனால் சமூக ஊடகத்தால் மட்டுமே களத்தில் தீவிரமாகப் பணியாற்றக்கூடிய உறுப்பினர்களை (Cadres) உருவாக்கிவிட முடியாது. அதற்கு ஒருவர் தான் சார்ந்துள்ள அமைப்பு சார்ந்த கருத்தியல் கல்வி மற்றும் களத்திலும் பணி செய்ய வேண்டும்.
இன்று இரண்டையும் இணைத்து கொண்டு போக வேண்டிய சூழல் உருவாகி விட்டது.
"வதந்தி என்பது வெறும் பொய்ச் செய்தி அல்ல; அது ஒரு அரசியல் ஆயுதம்...
பொய்யை அம்பலப்படுத்துவது மட்டும் போதாது. அந்தப் பொய் உருவாக்கிய அரசியல் தாக்கத்தையும் தகர்க்க வேண்டும்"
ரூமி:
சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன?
சேது சிவன்:
வதந்தி என்பது வெறும் ஒரு பொய்ச் செய்தி அல்ல; அது ஒரு அரசியல் ஆயுதம்.
நான் செய்தியாளராக கவனித்த ஒரு முக்கியமான உதாரணம் சாம்சங் தொழிலாளர் போராட்டம். அந்தப் போராட்டத்தின் போது தொழிற்சங்கங்களைப் பற்றிய பல பொய்யான தகவல்கள் திட்டமிட்டு பரப்பப்பட்டன. CITU தலைவர்கள் பணம் வாங்கிவிட்டார்கள், கார் வாங்கிவிட்டார்கள், போராட்டம் உண்மையானதல்ல என்று போலி போஸ்டர்கள் மற்றும் செய்திகள் பரவின.
பின்னர் தொழிற்சங்கத் தலைவர்கள் ஆதாரங்களுடன் பதிலடி கொடுத்தனர், தன்னெழுச்சியாக இளைஞர்கள் இடதுசாரிகள் வழக்கறிஞர்கள் அவற்றை மறுத்தனர். அதை ஒரு கடுமையான போர் சூழலாக தான் நான் பார்த்தேன். ஆனால் அதற்குள் அந்தப் பொய்த் செய்தி பரவி, தனது வேலையைச் செய்துவிட்டது. அதனால் தான் நான் கூறுவது, பொய்யை மறுப்பது மட்டும் போதாது; அந்தப் பொய் உருவாக்கிய அரசியல் தாக்கத்தையும் தகர்க்க வேண்டும்.
ரூமி:
இன்றும் தமிழக அரசியலில் இதுபோன்ற Fake news/பொய்ச் செய்தி அதிகரித்துள்ளதா?
சேது சிவன்:
ஆம். இன்று பல விவாதங்கள் உண்மைகளை மையமாகக் கொண்டு நடைபெறுவதில்லை.
ஒரு புள்ளிவிவரத்தை மேற்கோள் காட்ட வேண்டிய ஒரு அமைச்சர் ஒரு ட்வீட்டை மேற்கோள் காட்டுகிறார். சமூக வலைத்தளத்தில் பரவும் ஒரு தகவல் சில மணி நேரங்களிலேயே அரசியல் உண்மையாக மாறிவிடுகிறது.
உதாரணமாக, "பல பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறிவிட்டன" போன்ற கூற்றுகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவுகின்றன. ஆனால் அதற்கான அதிகாரப்பூர்வ ஆவணங்கள், பொருளாதார தரவுகள் குறித்து மிகக் குறைவாகவே பேசப்படுகிறது. இதனால் நமது அரசியல் விவாதம் யதார்த்தத்தைப் பற்றி அல்ல; கதை உருவாக்குவதைப் பற்றியதாக மாறுகிறது.

ரூமி:
அப்படியென்றால், சமூக ஊடகங்கள் அரசியலை மோசமாகிவிட்டதா?
சேது சிவன்:
இல்லை. அப்படி சொல்லிவிட முடியாது, ஒரு நல்ல மாற்றமும் நடந்திருக்கிறது.
முன்பு தமிழக அரசியல் என்றால் பலருக்கும் திமுக–அதிமுக என்ற இரு கட்சிகளைச் சுற்றிய விவாதம்தான் இருந்தது. தற்போது அரசியல் குறித்து பேசும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, அவர்கள் அரசியலை கவனிக்கிறார்கள், விவாதிக்கிறார்கள்.
அது ஜனநாயகத்திற்கு நல்லது.
ஆனால் அதே நேரத்தில் உண்மைகளை விட உணர்ச்சிகளும், ஆதாரங்களை விட டிரெண்ட்களும், பிரச்சாரங்களும் அதிகரித்துள்ளன, அதை எதிர்கொள்வது தான் இன்றைய சவால்.
ரூமி:
அண்மையில் திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கிடையே சமூக வலைத்தளங்களில் நடைபெறும் கருத்து மோதலை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
சேது சிவன்:
ஆரோக்கியமான அரசியல் விவாதங்கள் ஜனநாயகத்திற்கு நல்லவை.
கலைஞரின் காலத்தில்,
'தீக்கதிர்' மற்றும்
'முரசொலி' ஆகியவற்றுக்கு இடையே தத்துவம் மற்றும் தொழிலாளர் உரிமைகள் குறித்த வலுவான நேரடி காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன; ஆனால் தற்போதைய சண்டை, முரசொலி தரப்பில்
தனி நபர் தாக்குதலாக மட்டுமே இருந்தது. இது ஆரோக்கியமான விவாதத்தை கெடுத்துவிட்டது என வருத்தமளிக்கிறது.
தமிழ்நாட்டில் இடதுசாரிகள் ஜனநாயக சக்திகள் இன்னும் வலுப்பெற வேண்டும். அதற்கு கருத்து மோதல்களும் விமர்சனங்களும் தேவை. ஆனால் அவை தனிநபர் தாக்குதலாக அல்லாமல், அரசியல் கருத்துகளின் அடிப்படையில் நடைபெற வேண்டும்.
ரூமி:
இந்தச் சூழலில் ஜனநாயக சக்திகள் / இடதுசாரி இயக்கங்களின் பங்கு என்னவாக இருக்க வேண்டும்?
சேது சிவன்:
அரசியல் விவாதங்களும் கருத்து மோதல்களும் ஜனநாயகத்திற்கு அவசியமானவை, அவற்றில் கூர்மையான கருத்தியல் தலையீடு இருக்க வேண்டும். தேர்தல் அரசியலைத் தாண்டி சினிமா, கலை, இலக்கியம், தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, வணிகம், பண்பாடு என மக்களின் அன்றாட வாழ்க்கையைத் தொடும் எல்லா தளங்களிலும் இடதுசாரி பார்வை தொடர்ந்து முன்வைக்கப்பட வேண்டும்.
வலதுசாரிகள் டிஜிட்டல் தளங்களை எப்படிப் பயன்படுத்துகிறார்களோ, அதே தீவிரத்துடன் முற்போக்கு சிந்தனைகளும் மக்களைச் சென்றடைய வேண்டும்.
ரூமி:சமூக ஊடகங்களுக்குள்ளும் ஜனநாயகத்திற்கான போராட்டம் உள்ளதா?
சேது சிவன்:
நிச்சயமாக. கார்ப்பரேட் ஆதிக்கமும் IT Wing கலாச்சாரமும் ஜனநாயக உரையாடலுக்கான வெளியைச் சுருக்கி வருகின்றன. ஜனநாயகத்திற்கான போராட்டம் இன்று தெருக்களிலும் சட்டமன்றங்களிலும் மட்டுமல்ல; டிஜிட்டல் தளங்களுக்குள்ளும் நடைபெறுகிறது. எனவே, மாறுபட்ட பார்வையும் கருத்தியலும் விவாதிக்கும் ஜனநாயக சூழலை உருவாக்குவது அவசியம்.