Bread and RedBread and Red
ArticlesEnglishVideosPodcastsEditorialEventsInteractShop
HomeArticlesEnglishVideosPodcastsEditorialEventsInteractShop
Bread and RedBread and Red
SupportContact
Join Now

Copyright © 2026 Bread and Red

fXig
PoliticseconomyTechnology

GHOST RIDERS - சென்னையின் கோஸ்ட் ரைடர்ஸ்

By KEPIL·June 28, 2026
8 min read
GHOST RIDERS - சென்னையின் கோஸ்ட் ரைடர்ஸ்
இரவு 11 மணி

OMR எல்காட் சந்திப்பு, நிஷாந்த் பதட்டமாக என்னை சந்திக்க வேண்டும் என கேட்டிருந்தார், காரணம் அவர் ஹெல்மெட் என்னிடம் இருக்கிறது. மெட்ரோ பணிகளுக்காக எழுப்பப்பட்டிருந்த தூண்கள் இரவு விளக்குகளில் நிழல்களை உருவாக்கின.  தேநீர் கடைகள், இரவு பேருந்துகள் ஐடி நிறுவன பேருந்துகள், அவ்வப்போது கடந்து செல்ல

நிஷாந்த் அழைத்தார்.

"ஒரு ரைடு முடிச்சுட்டு வர்றேன், ரெட்," என்று கூறியிருந்தார் 

சில நிமிடங்களில் அவர் வந்தார். "நல்ல வேலை வைத்திருந்தீர்கள்,நேற்று உங்களை வீட்டில் விட்டுவிட்டுத் திரும்பும் போதுதான், நான் என் தலைக்கவசத்தை (helmet) மறந்துவிட்டதை உணர்ந்தேன்" என்றார். நான் அவருடன் ஒரு நேர்காணலைத் திட்டமிட்டிருந்தேன், அதைப் பற்றிக் கேட்டேன்; அவர் சிரித்துக்கொண்டே...

"என் கதை எல்லாம் கேக்கணும் வந்திருக்கீங்க.. சரி வாங்க"

"ரெட், போய்ட்டே பேசலாம்," என்றார்.

நாங்கள் எல்காட்டில் இருந்து சிறுசேரி SIPCOT நோக்கி பயணிக்கத் தொடங்கினோம், வழியெங்கும் ஓஎம்ஆரின் இரவு வாழ்க்கை கண்முன் விரிந்தது. 

ரெட்:
முதலில் உங்களைப் பற்றி சொல்லுங்கள்.

நிஷாந்த்:
என் பெயர் நிஷாந்த். இரண்டு வருடங்களாக பைக் டாக்ஸி ஆப்களில் ஓட்டி வருகிறேன்.
இதற்கு முன் CCNA படிச்சு நெட்வொர்க் டெஸ்டிங் வேலை பார்த்தேன். பிறகு லேஆஃப்/ layoff ஆயிட்டேன்.

ஆரம்பத்தில் இந்த வேலை தற்காலிகம்தான் என்று நினைத்தேன். வேலை கிடைக்கும் வரை செலவுக்காசுக்காக ஓட்ட ஆரம்பித்தேன். ஆனா காலம் போகப் போக இதுவே முழுநேர வருமானமாக மாறிவிட்டது.

ரெட்:
அப்படியே ஆட்குறைப்புறுனு அனுப்பலாமா? நீங்க எதுவும் கேட்கலையா?

நிஷாந்த்:
பண்ணக்கூடாதுதான். ஆனா யார் கேட்பாங்க? 'வேலை இல்ல'ன்னு அந்த மாத சம்பளத்தோட அனுப்பிட்டாங்க. கேட்டா மிரட்டுவாங்க. இல்லன்னா ஏதாவது அமைப்போ சங்கத்துக்குப் போகணும். அப்போ எனக்கு அந்த தெம்பும் இல்ல,  அமைதியா இங்க வந்துட்டேன்

ரெட்:
ஒரு நாள் எப்படி செல்கிறது?

நிஷாந்த்:
சராசரியாக பன்னிரண்டு மணி நேரம் ஓட்டுவேன்.

சிலருக்கு இது சும்மா பைக் ஓட்டுற வேலை மாதிரி தோணும். ஆனா ரைடு தேடணும், பெட்ரோல் கணக்கு பார்க்கணும், எந்த ரைடு எடுத்தா லாபம் இருக்கும் என்று யோசிக்கணும்.
சென்னையில் இரவு பயணம் , மக்களை சந்திப்பது நல்ல அனுபவம்.
ஆனா வேலை பாதுகாப்பு இல்லாதது தினமும் மனசுல இருக்கும்.

ரெட் :
இரவு நேரத்தில் வேலை செய்ய விருப்பம் என்கிறீர்களே?

நிஷாந்த் :
ஆமாம்.
இரவில்தான் கொஞ்சம் நல்ல வருமானம் கிடைக்கும். Double charge / சர்ஜ் பிரைசிங் வரும். சாலைகளும் காலியாக இருக்கும்.
பெருங்குடியில் இருந்து சிறுசேரி வர பகலில் ஒரு மணி நேரம் ஆகும். இரவில் இருபது நிமிடம் போதும்.

ஆனா அதுக்கும் விலை இருக்கு.

கேளம்பாக்கம், திருப்போரூர், ஈசிஆர் பக்கம் நள்ளிரவில் போனால் திரும்ப ரைடு கிடைக்காமல் காத்திருக்க வேண்டியிருக்கும்.
பாதுகாப்பு பிரச்சினையும் இருக்கு,  தூக்கம், சாப்பாட்டு நேரம் கெட்டுப்போகும்.

ரெட்:
பயணிகளில் யார் அதிகம்?

நிஷாந்த்:
ஓஎம்ஆர், சோழிங்கநல்லூர் முழுக்க ஐடி ஊழியர்கள்தான்.
மாணவர்கள், அலுவலக ஊழியர்கள், பெண்கள், வேலைக்கு போகிறவர்கள்.

நிறைய பேரை சந்தித்திருக்கிறேன். சில நேரம் ஒரு ரைடு பத்து நிமிடம் தான் இருக்கும். ஆனா அந்த பத்து நிமிடத்தில் ஒரு மனிதரின் வாழ்க்கை கதையே தெரிந்துவிடும்.

ரெட்:
பெண்கள் பைக் டாக்ஸியை அதிகமாக பயன்படுத்துகிறார்களா?

நிஷாந்த்:
மக்கள் நினைப்பதை விட அதிகம், ஆரம்பத்தில் எனக்கும் தயக்கம் இருந்தது.

ஆனா இப்போ பார்த்தா அவர்களுக்கு முக்கியமானது பாதுகாப்பு மற்றும் நேரம்.
நாம் மரியாதையாக நடந்துகொண்டால் எந்த பிரச்சினையும் இல்லை,
இது "கல்ச்சர் சாக்குன்னு/ Culture shock) சொல்றாங்க ஆனா இது இயல்பு தான்
பல பெண்கள் தினசரி அலுவலக பயணத்திற்கே பயன்படுத்துகிறார்கள்.

ரெட் :
இந்த வேலை மூலம் ஏதும் நண்பர்கள் கிடைத்தார்களா?

நிஷாந்த் :
ஒரு வழக்கமான வாடிக்கையாளர்,  என்னை தனது கடை திறப்பு விழாவிற்கு அழைத்தார்.
ஒரு ஹெல்த்-கேர் ஐடி நிறுவனத்தில் அட்மினாக வேலை பார்த்த  பயணி எனக்கு நண்பராகிவிட்டார்,  எனக்கு ஒரு இன்டர்வியூ வாய்ப்பும் ஏற்பாடு செய்தார் அந்த பெண்.

வேலை உறுதியாகவில்லை, ஆனா இன்னும் முயற்சி செய்கிறேன்.
ஒருநாள் மீண்டும் நான் படித்த துறைக்குள் திரும்பலாம் என்ற நம்பிக்கை இருக்கு.



ரெட் :
சென்னையின் போக்குவரத்தை இந்த APP/ஆப்கள் மாற்றியிருக்கிறதா?

நிஷாந்த் :
நிறைய மாற்றி இருக்கிறது.
முன்பு மக்கள் பேருந்துக்காக காத்திருந்தார்கள், இப்போது மொபைல் திறந்து ரைடு புக் பண்ணுகிறார்கள். 

பல வழித்தடங்களில் பேருந்து வசதி அடிக்கடி இல்லை 
அதனால் , நானே வேலை பார்த்த காலத்தில் இந்த APP சேவைகளை பயன்படுத்தியிருக்கிறேன்.
ஆனா இன்று நான் ஒரு ரைடர் என்று நிறைய பேருக்கு தெரியாது. என் குடும்பத்திற்கே இந்த வேலை என்னளவுக்கு முக்கியம் என்று முழுமையாக தெரியாது.

ரெட் :
மாத வருமானம் எவ்வளவு?

நிஷாந்த் :
சராசரியாக 28,000 முதல் 30,000 ரூபாய் வரை.
அது கேட்கும்போது பெரிய தொகை போல இருக்கும்.
ஆனா பெட்ரோல், பராமரிப்பு, செலவுகள், EMI எல்லாம் கழித்தால் வாழ்க்கையை நடத்தும் அளவுதான்.

ரெட்:
வாடிக்கையாளர்களுக்கும் ஓட்டுநர்களுக்கும் இடையே ஏன் பிரச்சினைகள் வருகிறது?

நிஷாந்த்:
வாடிக்கையாளர்கள் இறுதி கட்டணத்தை மட்டும்தான் பார்க்கிறார்கள்.
பெட்ரோல் விலை, கமிஷன், நீண்ட தூர பிக்கப் எல்லாம் அவர்களுக்கு தெரியாது.
RAPIDO , UBER , OLA ஆப்கள் ஒன்றுக்கொன்று போட்டி போட்டு கட்டணத்தை குறைக்கின்றன.
அதன் சுமை நம்ம மேல் விழுகிறது, பிறகு கோபம் ஓட்டுநர்களிடம் வருகிறது.

ரெட்:
மாதத்தின் கடைசி நாட்கள் எப்படி இருக்கும்?

நிஷாந்த்:
இப்போது இளைஞர்களின் வாழ்க்கை முழுக்க பணம் Rotation-ல் சுற்றிக் கொண்டே இருக்கும்.
கடன் வாங்குவது.
போன் EMI, பைக் EMI,  வீட்டு செலவு.
எதிர்பாரா செலவு, ஒரு செலவு முடிந்தால் இன்னொரு செலவு.
பலருக்கு சேமிப்பு இல்லை.  ஏதோ ஓட்டிக்கொண்டு இருக்கிறோம்.

ரெட் :
இவற்றைத் தாண்டி, ஏதேனும் புதிய அனுபவம் கிடைத்ததா?

நிஷாந்த் :
ஒருநாள் பேசின் பிரிட்ஜ் பக்கம் ஒரு பேக்கரி கடைக்காரரை டிராப் பண்ணேன்.
ஒரு வடமாநிலத்தவர், பீஹாரினு நினைக்கிறேன், அவர் என்னை முன்பே பார்த்திருக்கிறார்.
பயந்துகொண்டே போனேன், வண்டி திருட்டு போய்டுமா, ஆள் வித்யாசமா இருக்காரே-னு தோணுச்சு,
இரவு நேரம்... ஏரியா அப்படி

இறங்கும்போது நூறு ரூபாய் கொடுத்து,

'இத வெச்சுக்கோ... எப்ப வேணாலும் என் கடைக்கு வா...
நேரத்துக்கு சாப்பிடுங்க.. பசிச்சா சாப்பிடாம வண்டி ஓட்டாத...' ன்னு சொன்னார்."

செருப்பால அடிச்ச மாதிரி இருந்துச்சு. "வடக்கன்", "பான் பராக் வாயன்" என்று வடமாநில மக்களைப் பற்றி கேலி செய்யும் அளவைத் தவிர, அவர்கள் மீது எனக்கு வேறு எந்தக் கருத்தும் இருந்ததில்லை. ஆனால் அந்த அனுபவம் என் கண்ணோட்டத்தையே மாற்றியது

சில நேரம் நம்ம சொந்தக்காரங்க கூட கேக்காத கேள்விய, தெரியாத ஒரு மனிதன் கேட்டுட்டு போயிருவான். அதுதான் இந்த வேலை எனக்கு கற்றுக்கொடுத்தது

ரெட் :

ஓட்டுநர்களுக்குள் ஒற்றுமை இருக்கிறதா?

நிஷாந்த் :
இருக்கு., எங்களுக்கென்று ஒரு வாட்ஸ்அப் குழு இருக்கு.

அதுக்கு "Ghost Riders" என்று பெயர்.
180 பேருக்கு மேல இருக்காங்க.
யாராவது பைக் பழுதாகி நின்றால் குழுவில் சொல்வாங்க. அருகில் இருப்பவர்கள் உதவி செய்வார்கள்.

பஞ்சர் கடை எங்கே இருக்கு, மெக்கானிக் யார், எந்த இடத்தில் உதவி கிடைக்கும் என்று தகவல்கள் பகிர்ந்துகொள்வோம்.
அதுமட்டுமில்லை. நிறைய Job Alert, Interview தகவல்கள், Vacancy Advertisement எல்லாம் தினமும் வரும்.
ஏன்னா நம்மில் பெரும்பாலானவர்களும் இந்த வேலையை தொடர  நினைப்பதில்லை.

யாருக்காவது வேலை கிடைத்தால் அடுத்தவருக்கும் உதவுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.


ரெட்:
நேரில் அவர்களை சந்திப்பீர்களா?

நிஷாந்த்:
OMR ஃபுட் ஸ்ட்ரீட்லதான் நாங்க சந்திப்போம்.
பைக் டாக்ஸி மட்டும் இல்ல. ஸ்விக்கி, ஸோமாட்டோ, செப்டோ என அனைவரும் சந்திப்போம்.
யாருக்கு எந்த ஆப்புல நல்ல இன்சென்டிவ்.
யாரு மூணு ஆப்பும் ஓட்டுறாங்க.
ரெஃபர் பண்ணினா எவ்வளவு போனஸ், அதெல்லாம் பேசுவோம்.

அதே நேரத்தில் குழு முழுக்க சீரியஸாக இருக்காது.
நல்ல கலாய்ப்பு இருக்கும், மீம்ஸ் வரும்.
ரைடில் நடந்த சம்பவங்கள் வரும்.
சிரித்துக்கொள்வோம். 

உண்மையைச் சொன்னால் மாதக் கடைசியில் அதிகமாக ஆக்டிவாக இருப்பதும் அந்தக் குரூப்புதான்.
யாருக்காவது பணம் தேவைப்பட்டால் கேட்பாங்க.
கடன் வாங்குவோம், திருப்பிக் கொடுப்போம்.
அடுத்த மாதம் வேறு யாருக்காவது  கேட்பாங்க, இப்படி ஓடிக்கொண்டே இருக்கும்.

ரெட்:
இந்த வேலையை ஒரு வேலைவாய்ப்பு என்று சொல்ல முடியுமா?

நிஷாந்த்:
அப்படி சொல்ல முடியாது.
அரசு வேலைவாய்ப்பு உருவாகிறது என்று சொன்னால் அது  உண்மை இல்லை.

வருமானம் கிடைக்கிறது, ஆனா பாதுகாப்பு இல்லை.
நாளைக்கு என்ன ஆகும் என்று தெரியாது.
நிறுவனங்கள் நம்மை ஊழியர்களாக கூட ஏற்றுக்கொள்ளவில்லை.

ரெட்:
உடனடியாக தீர்க்க வேண்டிய பிரச்சினைன்னா, எதைச் சொல்வீங்க?

நிஷாந்த்:
முதல்ல இன்சூரன்ஸ்தான், ரெட். விபத்து நடந்தா இன்சூரன்ஸ் பணம் கிடைக்கிறதுக்குள்ள உயிரே போயிடும் போல இருக்கும். அந்த நடைமுறையே ரொம்ப சிக்கலா இருக்கு.

இன்னொரு விஷயம்... நிறைய டிரைவர்கள்கிட்ட ஒரு சின்ன நோட்டு அல்லது காகிதம் இருக்கும். அதுல அவங்களோட மருத்துவ விவரங்கள், அவசரகாலத் தொடர்பு எண்கள் எல்லாம்  வச்சிருப்பாங்க. எங்களுக்கு உடனடியாகத் தேவைப்படுறது நல்ல மருத்துவப் பாதுகாப்பும், எளிதாகக் கிடைக்கக்கூடிய சுகாதார வசதிகளும்தான்.

ரெட்:

உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டதா?

நிஷாந்த்:
நிறைய.
சில மாதங்களுக்கு முன் தொடர்ந்து வயிற்றெரிச்சல், ஆசிடிட்டி, ஜீரண பிரச்சினைகள் இருந்தது.
சில நேரம் ரைடு கிடைக்குமோ என்று சாப்பிடாமல் இருப்போம். பிறகு இரவு நேரத்தில் கிடைத்ததை சாப்பிடுவோம். அது உடம்பை பாதிக்கும்.

சென்னை வெயிலில் தினமும் பல மணி நேரம் பைக்கில் உட்கார்ந்து இருப்பதால் தொடைப் பகுதியில் வெப்பக் காயங்கள் கூட வந்திருக்கிறது.
மக்கள் நம்மை சாலையில் பார்க்கிறார்கள், ஆனா இந்த வேலை உடம்புக்கு என்ன செய்கிறது என்று தெரியாது.

ரொம்ப பொலம்புகிறேனா ரெட்??

ரெட்:

இல்லை இல்லை..  இன்ஸ்டாகிராம் , சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்கள்
உங்களைப் போலப் பேசுவதில்லையே?

நிஷாந்த்:
இங்கே ஒரு பெரிய வேறுபாடு இருக்கு, ரெட். ஒரு அளவு வசதி படைத்த குடும்பங்களில் பிறந்து, வீடு வாசல் நிலையான வாழ்க்கை வாழ்பவர்களுக்கும், எங்களைப் போல சிறு மாவட்டங்களிலிருந்து நகரங்களுக்கு வந்து வேலை செய்பவர்களுக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. அவர்களுக்கு இருக்கும் சமூகச் சலுகைகளும், வாய்ப்புகளும் பலரிடம் இல்லை.

இன்ஸ்டாகிராம் ரீல்ஸிலும் டிக்டாக்கிலும் எங்களை நீங்கள் காணுவது கடினம். ஆனால் இங்கே வேலை செய்யும் பெரும்பாலான இளைஞர்கள், என்னைப் போன்ற பின்னணியிலிருந்து வந்தவர்கள்தான்.

ரெட்:
உங்கள் கோரிக்கைகளை அரசிடம் கேட்கவில்லையா?

நிஷாந்த்:
ஆமாம், கேட்க தான் வேணும். 
அதற்க்கு அமைப்பா இணையணும், நம்முடைய கோரிக்கைகளைத் முன்வைக்க வேண்டும்.
ஆனால் அந்தத் துணிச்சலுடன் எத்தனை பேர் முன்வருவார்கள் என்று தெரியவில்லை.

ரெட்:
வேலையில்லா இளைஞர்களின் நிலையை எப்படி பார்க்கிறீர்கள்?

நிஷாந்த்:
வேலையில்லாத நிலையை ரொமான்டிசைஸ் பண்ணக்கூடாது, ரெட்.

வீட்டில் பணம் கேட்பது ரொம்ப கஷ்டம். ஆனா வாழ்ந்தாகணுமே... வேற வழியில்லை.
அதனால்தான் இந்த வேலைக்கு வந்தேன்.. என்னுடன் ஓட்டுபவர்களில் பலர் பட்டதாரிகள்.
பலர் படித்த துறையில் வேலை கிடைக்காமல் இங்கே இருக்கிறார்கள்.
விரும்பிய வேலையை விட, கிடைத்த வேலையைத்தான் செய்கிறார்கள்.


ரெட்:
அரசு என்ன செய்ய வேண்டும் நினைக்குறீர்கள்?

நிஷாந்த்:
தமிழ்நாடு கல்வியில் நிறைய செய்திருக்கிறது.
ஆனா கல்விக்கு அடுத்த  வேலை? நாம் படித்த துறைக்கு ஏற்ற வேலை இல்லை.
அது ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும் சூழல் உள்ளது.
வேலை இழந்தவர்களுக்கு வேலையின்மை காப்பீடு , மறு-பயிற்சி திறன் மேம்பாட்டு மையங்கள், சமூகப் பாதுகாப்பு வேண்டும். 

ரெட்:
நீங்கள் ஏதும் அதற்கு முயற்சி செஞ்சரிக்கிங்களா??

நிஷாந்த்:
நான் இங்க இருந்து தப்பிச்சா போதும்னு இருந்தேன் ரெட்.
சொந்தக்காரங்க, மச்சினேன்கள் வெளிநாட்டுல இருக்காங்க. ஆனா உதவி பண்ண மாட்டாங்க.

அவங்ககிட்ட பேசும்போது ஆஸ்திரேலியா, சீனா மாதிரி சில நாடுகளைப் பற்றி கேள்விப்பட்டிருக்கேன். அங்க வேலை போனவங்களுக்கு அரசாங்கம் உதவும்,
சில துறைகள்ல கூட்டுறவு முறையிலயும்,  கிக் சேவைகள் நடக்குதுன்னும் சொல்வாங்க.

அதெல்லாம் எவ்வளவு உண்மைன்னு எனக்குத் தெரியாது. ஆனா ஒரு விஷயம் மட்டும் நிச்சயம்... வேலை போன உடனே ஒருத்தன் நேரா வாழ்வாதார நெருக்கடிக்குள் தள்ளப்படக் கூடாது

ரெட்:

ஆனால் இவை எல்லாமே தற்காலிகத் தீர்வுகள்தானே?

நிஷாந்த்:
ஆமாம்.  ஆனா இப்ப எங்களுக்கு அது கூட இல்ல..

நல்ல அரசு வேலை, நியாயமான சம்பளம், மரியாதையான வாழ்க்கை அவ்ளோதான்., எனக்கு தெரிஞ்ச தீர்வு.

எலக்ட்ரானிக்ஸ், செமிகண்டக்டர், AI மாதிரி துறைகள்ல அரசாங்கமே புதிய நிறுவனங்களை தொடங்கலாம். அப்போதான் படித்த இளைஞர்களுக்கு அவங்க படித்த துறையிலேயே அதிக வேலை கிடைக்கும். 

இதெல்லாம் நடக்குமா தெரியல, ரெட்... ஆனா இந்த நிலைமை மட்டும் மாறணும்

ரெட்:
அதற்கு நீங்க தான் ஏதாவது செய்யணும்...

நாங்கள் சிறுசேரி SIPCOT அருகே உள்ள அன்பு கஃபேயில் நிறுத்தினோம்.

இரவு ஷிப்ட் முடித்த சில ஐடி ஊழியர்கள் தேநீர் குடித்துக்கொண்டிருந்தனர்.
பரபரப்பான சாலைகள் சற்று அமைதி கொண்டன

ரெட்:
கடைசியாக, தினமும் இந்த ஓஎம்ஆர் சாலையில் ஓடும்போது என்ன தோன்றுகிறது?

நிஷாந்த்:
இந்த பெரிய கண்ணாடி கட்டிடங்களுக்குள்ள உலகமே பயன்படுத்துற மென்பொருளும், தொழில்நுட்பமும் உருவாகுது. அது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்
அதற்கு வெளியே வேறு ஒரு உலகம் இருக்கு , நம்ம டாக்ஸி ஓட்டுநர்கள், டெலிவரி ஊழியர்கள், பாதுகாப்பு பணியாளர்கள், பாமர ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். எல்லாரும் சேர்ந்து தான் இந்த OMR இயங்குகிறது.

ஆனா எல்லாரும் ஒரே அளவுக்கு கண்ணுக்கு தெரியவில்லை.
நாங்க இருக்கிறோம், ஆனா பல நேரங்களில் கண்ணுக்கு தெரிந்தும் தெரியாமல் இருக்கிறோம்.

தேநீர் வந்தது.
நிஷாந்தின் கைப்பேசி அதே நேரத்தில் ஒலித்தது.

மற்றொரு ரைடு.
மற்றொரு பயணி.
மற்றொரு பயணம்.

கைப்பேசியைப் பார்த்தார். பிறகு என்னைப் பார்த்து சிரித்தார்.
"கரெக்டுதான்... ஏதாச்சும் செய்யணும் ரெட்டு." என்றார்

தேநீரை முடித்துவிட்டு ஹெல்மெட்டை அணிந்துகொண்டார்.

"நல்லா இருந்துச்சு ரெட். சில விஷயங்களை மனசுல வைத்துக்கிட்டு தான் இருந்தேன். இப்ப சொல்லிட்ட மாதிரி இருக்கு." என்றார்

கையை அசைத்துவிட்டு, புதிய ரைடை ஏற்றுக்கொண்டார்.
பைக் ஸ்டார்ட் ஆனது.
ஓஎம்ஆரின் இரவு சாலையில் அவர் மெதுவாக மறைந்தார்.
சென்னையின் இன்னொரு கோஸ்ட் ரைடர்.

அவர் சென்ற பிறகும், அவர் பேசிய  வார்த்தை மனதில் ஓலித்துக்கொண்டே  இருந்தது.

"ஏதாச்சும் செய்யணும், ரெட்டு"


- கபில்

குறிப்பு: 2026-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் தரவுகளின்படி,  சுமார் 8 லட்சம் கிக் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில்  உள்ளனர். அவர்களில் 60  சதவீதத்திற்கும் மேற்பட்டோர் சென்னையில் பணிபுரிகிறார்கள் , 65 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் அடித்தட்டு மக்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள். பொருளாதார நிபுணர்களின் கணிப்பின்படி, 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் கிக் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2.5 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

டெல்லியில் ஒரு ஜல்லிக்கட்டு? CJP PROTESTS
Politics

டெல்லியில் ஒரு ஜல்லிக்கட்டு? CJP PROTESTS

ஹிஷாம் காலித் · July 24, 2026
ஜென்-Z என்னும் மாயை
Politics

ஜென்-Z என்னும் மாயை

கபில் , ஹிஷாம் · July 19, 2026
டிஜிட்டல் போர்க்களம்: ஒரு புதிய யதார்த்தம்
Politics

டிஜிட்டல் போர்க்களம்: ஒரு புதிய யதார்த்தம்

சேது சிவன், ரூமி · July 10, 2026
No BC (Muslim) Reservation?  Madras High Court struck down G.O.
Politics

No BC (Muslim) Reservation? Madras High Court struck down G.O.

Safdar · June 29, 2026
இந்தியாவின் வளர்ச்சி: பொருளாதார முன்னேற்றமா அல்லது சமூக பின்னடைவோ?
Politics

இந்தியாவின் வளர்ச்சி: பொருளாதார முன்னேற்றமா அல்லது சமூக பின்னடைவோ?

டோரு கஸாம · June 20, 2026
மார்க்சியமும் பெரியாரின் நாத்திகமும்
Politics

மார்க்சியமும் பெரியாரின் நாத்திகமும்

சஞ்சய் ராமசாமி · June 19, 2026
டெல்லியில் ஒரு ஜல்லிக்கட்டு? CJP PROTESTS
Politics

டெல்லியில் ஒரு ஜல்லிக்கட்டு? CJP PROTESTS

ஹிஷாம் காலித் · July 24, 2026
ஜென்-Z என்னும் மாயை
Politics

ஜென்-Z என்னும் மாயை

கபில் , ஹிஷாம் · July 19, 2026
டிஜிட்டல் போர்க்களம்: ஒரு புதிய யதார்த்தம்
Politics

டிஜிட்டல் போர்க்களம்: ஒரு புதிய யதார்த்தம்

சேது சிவன், ரூமி · July 10, 2026
No BC (Muslim) Reservation?  Madras High Court struck down G.O.
Politics

No BC (Muslim) Reservation? Madras High Court struck down G.O.

Safdar · June 29, 2026
இந்தியாவின் வளர்ச்சி: பொருளாதார முன்னேற்றமா அல்லது சமூக பின்னடைவோ?
Politics

இந்தியாவின் வளர்ச்சி: பொருளாதார முன்னேற்றமா அல்லது சமூக பின்னடைவோ?

டோரு கஸாம · June 20, 2026
மார்க்சியமும் பெரியாரின் நாத்திகமும்
Politics

மார்க்சியமும் பெரியாரின் நாத்திகமும்

சஞ்சய் ராமசாமி · June 19, 2026