Bread and RedBread and Red
ArticlesEnglishVideosPodcastsEditorialEventsInteractShop
HomeArticlesEnglishVideosPodcastsEditorialEventsInteractShop
Bread and RedBread and Red
SupportContact
Join Now

Copyright © 2026 Bread and Red

fXig
Politicsscienceeconomy

கியூபாவின் ராணுவம்

By ஹிஷாம் காலித்·June 14, 2026
7 min read
கியூபாவின் ராணுவம்
மனிதாபிமாம் என்பது அழுவதல்ல, போராடுவது ,
அது போர்குனம் மிக்கது
           -  மாக்ஸிம்  கார்க்கி
இங்கு ஒரு இராணுவம் உள்ளது, அதன் கைகளில் துப்பாக்கிகள் இல்லை; ஸ்டெதஸ்கோப்புகள் உள்ளன, புல்லட் ப்ரூஃப் ஜாக்கெட்  இல்லை; ஆனால் முகக்கவசங்களும் தடுப்பூசிகளும் உள்ளன.


உலகின் எந்த மூலையில் ஒரு பெருந்தொற்று வெடித்தாலும், இந்த இராணுவம் அங்கு செல்லும். நோய்களுக்கு எதிராகப் போராடும், துயரத்தில் இருக்கும் மக்களுக்குத் துணை நிற்கும். எப்போதும் தயார்நிலையில் வைக்கப்பட்டிருக்கும் இந்த இராணுவம் கியூபாவில் இருந்தாலும்,  அது சர்வதேசத்துக்குமானது , ஆம் அவர்கள் கியூபாவின் மருத்துவர்கள்.

"அவர்கள், வெள்ளை கோட் அணிந்த இராணுவம்" என்று அழைத்தார் புரட்சியாளர் ஃபிடல் காஸ்ட்ரோ. ஆனால் இந்த இராணுவத்தின் பிறப்பிடம் மருத்துவமனைகளில் இல்லை. அதன் வேர்கள், வேறு ஓரிடத்தில் உள்ளன.

புரட்சிக்கு  வித்திட்ட மருத்துவம்

1959 கியூபப் புரட்சிக்குப் பிறகு, ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையிலான அரசு ஒரு அடிப்படை கேள்வியை எழுப்பியது. "பணம் இருப்பவர்களுக்கு மட்டுமா மருத்துவம் கிடைக்க வேண்டும்?" அவர்களின் பதில் தெளிவானது: "இல்லை."

புரட்சிக்கு முன்பு பெரும்பாலான மருத்துவர்கள் ஹவானா நகரத்தில் இருந்தனர். கிராமப்புற மக்கள் வறுமை, ஊட்டச்சத்து குறைபாடு, நோய் மற்றும் மருத்துவ வசதியின்மையால் பாதிக்கப்பட்டிருந்தனர்.  மருத்துவம் அனைவருக்கும் இலவசமாக்கப்பட்டது ,  மருத்துவக் கல்லூரிகள் விரிவுபடுத்தப்பட்டன. மருத்துவர்கள் கிராமங்களுக்கு அனுப்பப்பட்டனர். நாடு முழுவதும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. மருத்துவர்கள் வெறும் கிராமங்களுக்குச் செல்வது மட்டும் போதாது; கிராமங்களிலிருந்தே மருத்துவர்கள் உருவாக வேண்டும்; அதற்கான சூழலையும் வாய்ப்புகளையும் நாம் உருவாக்க வேண்டும்” என பிடல் அரசு முடிவு செய்தது. அறிவைப் பகிர்ந்துகொள்ளவும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவும் 'சுவர்களற்ற பல்கலைக்கழகங்கள்'  என்ற பெயரில் வகுப்புகள் தொடங்கப்பட்டன. ஒரே ஆண்டில், கியூபாவின் கல்வியறிவு பிரச்சாரம் கல்வியறிவை 60% இலிருந்து 97% ஆக உயர்த்தியது.  அவர்கள் நோக்கங்களின் ஆழத்தை , சே குவேராவின் ஒரே ஒரு வாக்கியத்தின் மூலம் நாம் எளிதாக அறிந்துகொள்ளலாம்.

"உலகின் மிகப் பெரிய பணக்காரனின் சொத்துக்களை விட,
ஒரு மனிதனின் உயிர் கோடி மடங்கு மதிப்புடையது." 
           -  சே குவேரா

இதன் விளைவாக, 1962-ல் கியூபா போலியோவை முற்றிலும் ஒழித்தது. பின்னர் டிப்தீரியா, அம்மை, ரூபெல்லா, கக்குவான் இருமல் போன்ற நோய்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. 

பொருளாதார தடைகளை தாண்டிய அறிவியல் வளர்ச்சி

கியூபாவின் மிகப் பெரிய சாதனை என்னவென்றால், இந்த முன்னேற்றங்கள் அனைத்தும் கடுமையான பொருளாதாரத் தடைகளுக்கு (Economic Sanctions) நடுவில் நிகழ்ந்தன என்பதே.

பல ஆண்டுகளாக ஆய்வக உபகரணங்கள், மருத்துவக் கருவிகள், மருந்துகள் மற்றும் அறிவியல் தொழில்நுட்பங்களைப் பெறுவதில் கியூபா பெரும் சிரமங்களைச் சந்தித்தது. ஆனால், அந்நாடு பின்வாங்கவில்லை. மாறாக, சொந்தமாக ஒரு உயிரித் தொழில்நுட்பத் துறையை (Biotechnology) உருவாக்கியது. அரசு முதலீட்டில் ஆராய்ச்சி நிறுவனங்கள் நிறுவப்பட்டன. அதன் விளைவாக உலகையே ஆச்சரியப்படுத்தும் கண்டுபிடிப்புகள் உருவாயின. கடந்த பல தசாப்தங்களாக, SARS, எபோலா, காலரா, கொரோனா போன்ற பெருந்தொற்றுகள் ஏற்பட்டபோது, கியூபா தனது மருத்துவக் குழுக்களை பல நாடுகளுக்கு அனுப்பி உதவி செய்து வருகிறது.  அமெரிக்காவை விட கியூபாவில் தலைக்கு மூன்று மடங்கு அதிகமான doctors உள்ளனர். 2020-ல், 89,000 doctors, 84,000 nurses மற்றும் 9,000 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் பட்டம் பெற்றனர்

உயிர்களைக் காப்பாற்றிய  சாதனைகள்

இன்று, உலகிலேயே அதிக மருத்துவர்-மக்கள் விகிதம் கொண்ட நாடுகளில் கியூபாவும் ஒன்று. சராசரியாக ஒவ்வொரு 120 முதல் 130 மக்களுக்கும் ஒரு மருத்துவர் என்ற விகிதத்தில் மருத்துவர்கள் அங்கு பணியாற்றுகின்றனர்.  இதன் மூலம் கியூபா தனது சொந்த மருத்துவ அமைப்பை வலுப்படுத்தியதோடு, உலக நாடுகளுக்கும் மருத்துவ உதவிகளை அனுப்ப முடிந்தது.

 2015-ல் தாய் மூலம் குழந்தைக்கு HIV மற்றும் சிபிலிஸ் பரவுவதை முற்றிலும் தடுத்த முதல் நாடாக கியூபா அங்கீகரிக்கப்பட்டது.

உலகிற்கான மருத்துவப் பல்கலைக்கழகம்

1999-ல் தொடங்கப்பட்ட ELAM (Latin American Medical University) உலகின் மிகப்பெரிய மருத்துவக் கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். ஏழை மற்றும் வளர்ந்து வரும் நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு இங்கு முற்றிலும் இலவச மருத்துவக் கல்வி வழங்கப்படுகிறது. 120-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 31,000-க்கும் அதிகமான மருத்துவர்கள் இங்கு பயிற்சி பெற்றுள்ளனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்தும் கூட, போதிய பொருளாதார வசதியோ,  வாய்ப்புகளோ இல்லாத திறமையான மாணவர்கள் கடந்த பத்தாண்டுகளாகக் கியூபாவில் மருத்துவம் பயின்று வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவிலிருந்து பல்வேறு இன மற்றும் கலாச்சாரப் பின்னணிகளைக் கொண்ட நூற்றுக்கணக்கான மாணவர்கள் கியூபாவிற்கு வருகின்றனர்;  தங்களின் கல்விக்கு இங்கு வெறும் பணம் சம்பாதிப்பதை விட, ஒரு அர்த்தமுள்ள நோக்கம் கிடைப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

மருத்துவ தொழில்நுட்பத்தில் கியூபா

மருத்துவத்தை வெறும் சிகிச்சையாக மட்டும் அல்லாமல், நோய் தடுப்போடு இணைந்த ஒரு சமூகப் பொறுப்பாக கியூபா பார்க்கிறது. அதனால் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் உயிரித் தொழில்நுட்பத் துறைகளில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது.

1989 ஆம் ஆண்டு உலகிலேயே முதன்முறையாக மெனிஞ்சைட்டிஸ்-பி நோய்க்கான தடுப்பூசியை உருவாக்கியதுடன், ஹெபடைட்டிஸ்-பி நோய்க்கான தடுப்பூசியையும் கண்டுபிடித்து அந்த நோயை நாட்டில் பெருமளவில் கட்டுப்படுத்தும் சாதனையை நிகழ்த்தியது. மேலும், குழந்தைகளில் மூளை மற்றும் நுரையீரல் தொற்றுகளை ஏற்படுத்தும் ஹீமோஃபிலஸ் இன்ஃப்ளூயன்சா வகை பி (Hib) நோய்க்கு எதிராக செயற்கை ஆன்டிஜன் அடிப்படையிலான தடுப்பூசியை உருவாக்கியது.

குண்டுகளை அல்ல, மருத்துவர்களை ஏற்றுமதி செய்த நாடு

கியூபாவின் தனிச்சிறப்பே இதுதான், பல வல்லரசுகள் ஆயுதங்களை ஏற்றுமதி செய்கின்றன; ஆனால் கியூபா மருத்துவர்களை ஏற்றுமதி செய்கிறது!

1963-ம் ஆண்டு முதல் இன்று வரை, 6 லட்சத்திற்கும் அதிகமான கியூப மருத்துவப் பணியாளர்கள் 160-க்கும் மேற்பட்ட நாடுகளில் பணியாற்றியுள்ளனர். ஆப்பிரிக்காவில் எபோலா பரவியபோது அவர்கள் அங்கு இருந்தனர். ஹைத்தியில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது அவர்கள் அங்கு இருந்தனர், கோவிட் காலத்தில் இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளுக்கு அவர்கள் விரைந்து சென்றனர். 

பார்வையை மீட்ட "Operation Miracle"  கியூபாவும் வெனிசுலாவும் இணைந்து தொடங்கிய இந்தத் திட்டம் மூலம், 40 லட்சத்திற்கும் (4 Million) அதிகமான மக்களுக்கு இலவச கண் அறுவை சிகிச்சைகள் வழங்கப்பட்டன. இதனால் பலர் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலகைப் பார்க்க முடிந்தது.  இந்தியாவில் இன்னும் பலர் சாதாரண கண்புரை (Cataract) அறுவை சிகிச்சையை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புற்றுநோய்க்கு எதிரான போராட்டம்

புற்றுநோய் சிகிச்சையிலும் கியூபா உலக கவனத்தை ஈர்த்துள்ளது, நுரையீரல் புற்றுநோய்க்கான உலகின் முதல் சிகிச்சைத் தடுப்பூசியான CIMAvax கியூபாவில் உருவாக்கப்பட்டது. அமெரிக்காவில் கூட அப்போது அத்தகைய வசதிகள் கிடைக்கவில்லை.

பின்னர் VAXIRA என்ற மற்றொரு தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்பட்டது. பெரும் பணக்கார நாடுகளின் ஆய்வகங்களுக்குச் சமமான வசதிகள் இல்லாத நிலையிலும், கியூப விஞ்ஞானிகள் இந்த அதிசயங்களை நிகழ்த்தினர்.

கொரோனா காலத்தில் கியூபா

கொரோனா பரவத் தொடங்கிய ஆரம்ப கட்டத்திலேயே கியூபா விரைவான நடவடிக்கைகளை எடுத்தது. ஊரடங்கு, தனிமைப்படுத்தல், தொடர்பு கண்காணிப்பு, பரவலான பரிசோதனைகள் மற்றும் வீடு வீடாகச் சென்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

உலகிலேயே தன்னுடைய சொந்த கொரோனா தடுப்பூசிகளை உருவாக்கிய சில நாடுகளில் கியூபாவும் ஒன்று. "சோபெரானா-2" உள்ளிட்ட தடுப்பூசிகள் அந்நாட்டில் மக்களுக்கு வழங்கப்பட்டன.


மார்க்சியம், சே குவேரா - மருத்துவம்

இந்தக் கதையின் பின்னால் ஒரு ஆழமான தத்துவம் இருக்கிறது,  இந்தத் தத்துவத்தை வளர்த்தெடுத்த இயக்கம் உள்ளது. இந்தப் புரட்சிகர மாற்றத்திற்குப் பின்னால் இரண்டு பெரும் தலைவர்கள் நின்றனர்: ஃபிடல் காஸ்ட்ரோவும் , சே குவேராவும். 

மருத்துவம் ஒரு வணிகம் அல்ல. அது ஒரு அடிப்படை உரிமை, தனது இளமைக்காலத்தில் லத்தீன் அமெரிக்கா முழுவதும் மேற்கொண்ட பயணம்,  சே குவேராவின் வாழ்க்கையை மாற்றியது. அந்தப் பயணத்தில் அவர் கண்ட கடுமையான வறுமை, நோய் மற்றும் சமத்துவமின்மை அவரை ஆழமாகப் பாதித்தது. அவர் மருத்துவப் படிப்பு பயின்று வந்த ஒரு மாணவராக இருந்தார், அந்தப் பயணம் தான்  எர்னஸ்டோவை 'சே குவேரா'வாக மாற்றியது.

புரட்சிகரமான மருத்துவத்திற்குப் புரட்சிகரமான சமூகம் தேவை என்பதை அவர் உணர்ந்துகொண்டார்; இதுவே அவரை மார்க்சியத் தத்துவத்தை நோக்கி இட்டுச் சென்றது.

நிச்சயமாக ஒரு மருத்துவரால் நோயாளியின் நோயைக் குணப்படுத்த முடியும். ஆனால் வறுமையை ஒழிக்க முடியாது, அதற்கு சமூகமே மாற வேண்டும். வறுமைக்கும் நோய்க்கும் உள்ள தொடர்பு அத்தகையது ,  சமூகத்தின் அடிப்படை மாற்ற வேண்டும்; மருத்துவர்களும் அந்த மாற்றத்தின் பங்கேற்பவர்களாக இருக்க வேண்டும் -  சே குவேரா

ஆரம்ப சுகாதார மையங்கள் (Primary Health Care Centres) என்ற கருத்தின் அடிப்படை விதைகள் கியூபாவிலும், செ குவேராவின் சிந்தனைகளிலும் காணப்படுகின்றன. குறிப்பாக அவரது "புரட்சிகர மருத்துவம்" (On Revolutionary Medicine) என்ற புகழ்பெற்ற உரை,  மாற்றத்திற்கான ஒரு கருவி என்பதையும் வலியுறுத்துகிறது. கிராமப்புறங்களில் சிறிய மருத்துவ மையங்களை அமைத்து, மருத்துவ சேவையை மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சிகளே பின்னர் உலகளாவிய பொதுச் சுகாதார மாதிரிகளுக்கு முன்னோடியாக அமைந்தன. சே குவேராவையும் ஃபிடல் காஸ்ட்ரோவையும் வெறும் போராளிகளாக மட்டும் பார்ப்பது, அவர்களின் முழு பங்களிப்பை புரிந்துகொள்ளாமல் இருப்பதாகும். புரட்சிக்குப் பிறகு கல்வி மற்றும் மருத்துவத்தை நாட்டின் வளர்ச்சியின் அடித்தளமாக அவர்கள் மாற்றினர். 

இந்தியாவிற்கு தொழில்நுட்பம் வழங்கிய கியூபா

கியூபா தனது உயிரித் தொழில்நுட்ப அறிவையும் monoclonal antibody உற்பத்தி நுட்பங்களையும் இந்தியாவுடன் பகிர்ந்தது. கியூபாவில் உருவாக்கப்பட்ட Nimotuzumab மற்றும் Itolizumab போன்ற உயிரி மருந்துகள் தலை மற்றும் கழுத்துப் புற்றுநோய், சில வகை மூளைக் கட்டிகள் (glioma) உள்ளிட்ட நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்பட்டன. இந்த மருந்துகளுக்கான ஆராய்ச்சி அனுபவம், செல்கள் (cell lines), உற்பத்தி முறைகள் மற்றும் விஞ்ஞான நிபுணத்துவம் இந்தியாவின் Biocon நிறுவனத்திற்கு தொழில்நுட்பப் பரிமாற்றமாக வழங்கப்பட்டது. இதன் மூலம் இந்தியா monoclonal antibody உற்பத்தியில் ஆரம்பகால திறனைப் பெற்று, தனது உயிரி மருந்து மற்றும் biosimilar துறைகளின் வளர்ச்சிக்கான வலுவான அடித்தளத்தை உருவாக்கியது.

PATENT, காப்புரிமை ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டம்


மருத்துவம் என்பது காப்புரிமை, ஏகபோக ஆதிக்கம் என சில தனியார் நிறுவனங்களின் லாபத்திற்கான வணிகப் பொருளாக அல்ல; மனிதகுலத்தின் அடிப்படை உரிமையாக இருக்க வேண்டும். 2001-ஆம் ஆண்டு WTO-வில், கியூபா இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளுடன் இணைந்து,  வளர்ந்து வரும் நாடுகளுக்கு மருந்துகள் எளிதாகக் கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இதன் விளைவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட Doha அறிவிப்பு, மக்களின் சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கு காப்புரிமை சட்டங்கள் தடையாக இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்தது. அதன்பிறகும், மலிவான மருந்துகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை கியூபா தொடர்ந்து சர்வதேச அரங்குகளில் முன்வைத்து வந்தது.

இன்று மருத்துவம் ஒரு பெரிய வணிகமாக மாறியுள்ளது. இதற்கு மாற்றாக, கியூபா பொதுச் சுகாதாரம், அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் முதலீடு செய்து அனைவருக்கும் மருத்துவ சேவையை வழங்கும் மாதிரியை முன்வைக்கிறது. 140 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவில், தரமான அரசு மருத்துவம், வலுவான பொது சுகாதார அமைப்பு மற்றும் மருத்துவ சேவை அனைவரையும் சென்றடைவது காலத்தின் அவசியமாகும். மருத்துவம் மற்றும் அரசு நடைமுறைகள் குறித்த இந்தச் செய்தி முக்கியமானதா? என்ற சந்தேகம் தோன்றினால், நம்மைச் சுற்றியுள்ள இத்தகைய செய்திகள் இந்தியாவின் யதார்த்த நிலையை தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டே இருக்கின்றன.

மருத்துவம் - அனைவருக்குமானது

தமிழ்நாடு ஏற்கனவே இந்தியாவின் சிறந்த பொதுச் சுகாதார அமைப்புகளில் ஒன்றைக் கொண்டுள்ளது. ஆனால் கியூபாவிடமிருந்து அது கற்றுக்கொள்ள வேண்டியது சிறந்த மருத்துவமனைகளை அல்ல, சிறந்த தடுப்பு மருத்துவத்தையே. குடும்ப மருத்துவர் முறை, வீடு தேடி செல்லும் சுகாதார கண்காணிப்பு, ஊட்டச்சத்து மற்றும் சுகாதார விழிப்புணர்வுக்கு வழங்கப்படும் முக்கியத்துவம், சமூக நலத் திட்டங்களோடு இணைக்கப்பட்ட மருத்துவ அணுகுமுறை ஆகியவை நோய் வந்த பிறகு சிகிச்சை அளிப்பதை விட, நோய் வராமல் தடுக்க உதவுகின்றன. அதேபோல், மருத்துவத்தின்  தனியார்மயத்தையும் வணிகமயத்தையும் தவிர்ப்பது அவசியம் என்பதையும் கியூபா நினைவூட்டுகிறது. மருத்துவம் லாபத்தை மையமாகக் கொண்ட சேவையாக மாறும்போது, ஏழை மற்றும் நடுத்தர மக்களின் அணுகல் குறைகிறது

இந்தியாவிலோ, உலகின் பிற நாடுகளிலோ இது சாத்தியமா என்று நாம் கேட்கலாம். ஒருகாலத்தில் கியூபா மக்களும் அதே கேள்வியைத்தான் கேட்டிருப்பார்கள். இன்றும் அவர்கள் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மற்றும் அரசியல் அழுத்தங்களை எதிர்கொண்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும், அவர்கள் புதிய வழிகளைத் தேடி முன்னேறுகிறார்கள்.
"நாங்கள் யதார்த்தவாதிகள்; அதனால்தான் அசாத்தியத்தைக் கூட சாதிக்கத் துணிகிறோம்" என்று சே குவேரா கூறிய வார்த்தைகள், கியூபாவின் பயணத்திற்கும் பொருந்துகின்றன


- ஹிஷாம் காலித்

Related Articles

டெல்லியில் ஒரு ஜல்லிக்கட்டு? CJP PROTESTS
Politics

டெல்லியில் ஒரு ஜல்லிக்கட்டு? CJP PROTESTS

ஹிஷாம் காலித் · July 24, 2026
ஜென்-Z என்னும் மாயை
Politics

ஜென்-Z என்னும் மாயை

கபில் , ஹிஷாம் · July 19, 2026
டிஜிட்டல் போர்க்களம்: ஒரு புதிய யதார்த்தம்
Politics

டிஜிட்டல் போர்க்களம்: ஒரு புதிய யதார்த்தம்

சேது சிவன், ரூமி · July 10, 2026
No BC (Muslim) Reservation?  Madras High Court struck down G.O.
Politics

No BC (Muslim) Reservation? Madras High Court struck down G.O.

Safdar · June 29, 2026
GHOST RIDERS - சென்னையின் கோஸ்ட் ரைடர்ஸ்
Politics

GHOST RIDERS - சென்னையின் கோஸ்ட் ரைடர்ஸ்

KEPIL · June 28, 2026
இந்தியாவின் வளர்ச்சி: பொருளாதார முன்னேற்றமா அல்லது சமூக பின்னடைவோ?
Politics

இந்தியாவின் வளர்ச்சி: பொருளாதார முன்னேற்றமா அல்லது சமூக பின்னடைவோ?

டோரு கஸாம · June 20, 2026
டெல்லியில் ஒரு ஜல்லிக்கட்டு? CJP PROTESTS
Politics

டெல்லியில் ஒரு ஜல்லிக்கட்டு? CJP PROTESTS

ஹிஷாம் காலித் · July 24, 2026
ஜென்-Z என்னும் மாயை
Politics

ஜென்-Z என்னும் மாயை

கபில் , ஹிஷாம் · July 19, 2026
டிஜிட்டல் போர்க்களம்: ஒரு புதிய யதார்த்தம்
Politics

டிஜிட்டல் போர்க்களம்: ஒரு புதிய யதார்த்தம்

சேது சிவன், ரூமி · July 10, 2026
No BC (Muslim) Reservation?  Madras High Court struck down G.O.
Politics

No BC (Muslim) Reservation? Madras High Court struck down G.O.

Safdar · June 29, 2026
GHOST RIDERS - சென்னையின் கோஸ்ட் ரைடர்ஸ்
Politics

GHOST RIDERS - சென்னையின் கோஸ்ட் ரைடர்ஸ்

KEPIL · June 28, 2026
இந்தியாவின் வளர்ச்சி: பொருளாதார முன்னேற்றமா அல்லது சமூக பின்னடைவோ?
Politics

இந்தியாவின் வளர்ச்சி: பொருளாதார முன்னேற்றமா அல்லது சமூக பின்னடைவோ?

டோரு கஸாம · June 20, 2026